மறு விற்பனையின் மறுபக்கம்

மறு விற்பனையின் மறுபக்கம்
resales
நமது தேவைகளுக்கு ஏற்ப ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அக்கம் பக்கம் ஆலோசனை கேட்டதெல்லாம் அந்தக்காலம். இப்போது எல்லாவற்றுக்கும் கூகுள் தேடுபொறியே துணை என்று சொல்லும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் விரல் நுனியில் கொண்டுவந்துவிட்டது. மிக எளிதாக பல நடைமுறைகளை பழைய நடைமுறைகள் என்கிற மனநிலைக்கு கொண்டு வந்துவிட்டது. அதில் ஒன்றுதான் பயன்படுத்திய பொருட்களை விற்பதில் அல்லது வாங்குவதில் மக்களுக்கு இருந்த தடைகள் தயக்கங்களை அடியோடு நீக்கியுள்ளது இணைய தொழில் நுட்பம்.

கொஞ்சம் விலை அதிகமான பொருளை வாங்க வேண்டும் என்றால் அறிந்தவர்கள், அனுபவசாலிகளிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கை எல்லாம் பழைய நடைமுறைகளாகிவிட்டது. நகை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தால் பத்து கடை ஏறி இறங்கி விலை விசாரித்து பத்து ரூபாய் எங்கு குறைவாக கிடைக்கும் என்கிற தேடல் எதுவும் கிடையாது. ஆன்லைனிலேயே தேடலாம். வாங்கலாம், பிடிக்கவில்லையெனில் திருப்பி அனுப்பி விடலாம்.

ஏனென்றால் விற்பதிலும், வாங்குவதிலும் நுகர்வு வேகம் முன்பை விடவும் கணிசமாக அதிகரித்துள்ளது. பழையவற்றை விற்று, புதியதை வாங்குவதில் மட்டுமல்ல, புதியதை விற்று, பழையவற்றை வாங்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இப்படியாக நுகர்வு வேகத்தில் ஒன்றுதான் வித்துடுங்க, வாங்கிடுங்க என்கிற விளம்பரங்களும்…

புதிய பொருளை வாங்குவதற்கு முன்பு, அதன் விலை, தரம், ஏற்கெனவே பயன்படுத்தியவர்களின் கருத்துகளை ஆன்லைனிலேயே பார்த்து விடுகிறார்கள். பிறகு ஆன்லைனிலேயே ஆர்டர் கொடுப்பதற்கு முன்பு, எதற்கும் பார்த்துவிடுவோம் என குயிக்கர், ஓஎல்எக்ஸ் உள்ளிட்ட மறு விற்பனை இணைய தளங்களை பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. இதுதான் வித்துடுங்க வாங்கிடுங்க நுகர்வு வேகத்தின் வெற்றி.

ஏனென்றால் இது போன்ற விளம்பர இணைய தளங்களில் வாங்கிய சில நாட்களே ஆன புதிய பொருட்கள்கூட விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய பொருட்களை வாங்குவதைவிட விலை குறைவாக இங்கு வாங்கிவிடலாம். இது சரியானதா தவறானதா என்பதைத் தாண்டி இந்த வர்த்தக தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி அல்லது ஏமாறாமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.

இணையம் வழி மறு விற்பனை சந்தையில் பொருட்களை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் எந்த தொடர்புகளும் இருக்காது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாங்கிய பிறகு இவர்தான் விற்பனை செய்தவர் என்கிற அடையாளம் கிடைத்து விடுகிறது. பரிவர்த்தனையில் சிக்கல் என்றால் நேரடி பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். வளர்ந்து வரும் இந்த வித்துடுங்க வாங்கிடுங்க நுகர்வு சந்தையில் இது போன்ற சிக்கல்கள் புதிதாக முளைத்து வருகிறது.

அதற்கேற்ப சென்னையில் நடந்த சில சம்பவங்கள் இது. இது போன்ற விற்பனை அல்லது வாங்குகிற நடவடிக்கைகளுக்கு முன்பு மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சம்பவம் 1

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வீட்டுக்கு புதிய தொலைக்காட்சி வாங்க திட்டமிட்டவர், இதற்குமுன் ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருந்த 21 அங்குல தொலைக்காட்சி பெட்டியை விற்பனை செய்ய ஒரு இணைய தளத்தில் விளம்பரம் கொடுத்தார். இரண்டு மூன்று நாள்களுக்கு பிறகு ஒருவர் வந்து தொலைக்காட்சி பெட்டியை பார்த்து வாங்கிச் சென்றுள்ளார். காலையில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கிச் சென்ற அந்த நபர் மாலையில் மீண்டும் வந்து இது வேண்டாம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

விற்பனை செய்த டிவியை திரும்ப எப்படி வாங்க முடியும் என கேள்வி கேட்க, வந்தவர் டிவியை சுரேஷ் வீட்டு வாசலில் வைத்துவிட்டு பிரச்சினை செய்துள்ளார். அவருக்கு உதவியாக வந்தவர்கள் சிலரும் சுரேஷிடம் பிரச்சினை செய்ய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு டிவியை திரும்பவும் வாங்கிக் கொண்டார்.

சம்பவம் 2

கே கே நகரைச் சேர்ந்த தாமோதரன் தனது கேமராவை விற்பனை செய்ய பதிவு செய்து வைத்துள்ளார். இவரைத் தொடர்பு கொண்ட ஒருவர், கேமராவை எடுத்துக் கொண்டு கிண்டி வரை வர முடியுமா, பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறோம் என வரச் சொல்லி இருக்கிறார். கேமராவோடு சென்ற தாமோதரனை இரண்டு நபர்கள் சந்தித்துள்ளனர். கேமராவை செக் செய்ய வேண்டும் என வாங்கியவர்கள் தாமோதரனைத் தாக்கிவிட்டு கேமராவோடு வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

வித்துடுங்க வாங்கிடுங்க நுகர்வு சந்தையில் முன்னெச்சரிக்கை இல்லாத நடவடிக்கைகளால் இதுபோன்ற சிரமங்கள் உருவாகி வருகின்றன. தவிர பொருட்களை வாங்க வீடுகளுக்கு அழைப்பதால் தேவையில்லாத சில குற்றச் செயல்களுக்கு வாய்ப்பு உள்ளதாக காவல்துறை எச்சரித்து வருவதும் கவனிக்க வேண்டியுள்ளது.

தவிர பெண்கள் தங்களது தொலைபேசி எண்ணை இது போன்ற தளங்களில் கொடுப்பதால் தேவையில்லாத அழைப்புகளும் தொந்தரவாக அமைகிறது என்கிற புகாரும் உள்ளது. மேலும் எளிதாக பரிமாற்றக்கூடிய பொருட்களை பெரும்பாலும் பொதுவான இடத்தில் வைத்து விற்பனை செய்வது அல்லது அதற்கான விற்பனையாளர்களிடம் கொடுப்பதுதான் பாதுகாப்பானது என்றும் கூறுகின்றனர்.

ஆனாலும் மறு விற்பனையில் வாங்குகிற பொருட்கள் பெரும்பாலும் வாங்குகிறவர்களுக்கு பலன் தரக்கூடிய தாகவே உள்ளது என்கின்றனர். இது விற்கப்படும் பொருள் அல்லது அவரவர்களில் பேசும் திறனை பொறுத்தது. வீட்டு உபயோகப்பொருட் களில் மறு விற்பனை சாதாரணமாக நிகழ்கிறது. உடனடியாக வீடு மாறும் நெருக்கடியில் உள்ளவர்களிடமிருந்து வாங்குகிறபோது வாங்குகிறவருக்கு ஆதாயம்தான் என்றாலும், அவசர கதியில் வாங்குவதிலும் நிதானம் இருக்க வேண்டும் என்கின்றனர். இணையத்தில் பொருட்களின் புகைப்படங்களைப் பார்த்த உடனே வாங்க வேண்டும் என்று முடிவு செய்யாமல், நேரில் சென்று பார்த்து வாங்குவதுதான் பலன் கொடுப்பதாக இருக்கும்.

விற்பவருக்கும் வாங்குபவருக்கும் சாதகமான பலன்களை கொண்டுவந்துள்ளது என்று சொல்லலாம். பயன்படுத்திய பொருட்களை எப்படி விற்பது என்கிற குழப்பங்களுக்கு இணையதளங்கள் சரியான சந்தையை அமைத்துக் கொடுத்துள்ளது. அதுபோல பழைய பொருட்களையா வாங்குவது என்கிற மக்களின் மனநிலையையும் மாறியுள்ளது. இதற்கேற்ப பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார், வீடு என அனைத்தையும் விற்பனை செய்ய முடியும். வாங்க முடியும். தேவைக்கு ஏற்ப அலசி ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும் என்கிற நமது முன் தலைமுறை நடைமுறைகளை இணைய சந்தையிலும் பயன்படுத்த வேண்டும். அதேபோல விற்பனை செய்கிறபோதும் முன்னெச்சரிக்கையுடன் சரியான நபர்களாக பார்த்து விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் நமக்கு முன் உள்ள பாடம்

Leave a Reply