நள்ளிரவில் நடுக்கடலில் தத்தளித்த 2400 அகதிகள் மீட்பு
மத்தியதரைக்கடல் பகுதியில் நேற்று முன் தினம் இரவு கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2400 கைதிகளை இத்தாலிய கடலோர காவல்படை மீட்டு இத்தாலி அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையின்போது 14 அகதிகள் கடலில் குதித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்களும் மீட்கப்பட்டது.
இதுகுறித்து இத்தாலி கடலோர காவல்படையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
நடுக்கடலில் தத்தளித்த சுமார் ஆயிரம் அகதிகளை “ஓக்கிரோ’ என்னும் எண்ணெய் சரக்குக் கப்பல் சனிக்கிழமை இரவு மீட்டது. அது குறித்த தகவல் கிடைத்ததும் நார்வேயைச் சேர்ந்த “சியெம் பைலட்’ என்கிற மீட்புக் கப்பல் அந்த எண்ணெய் கப்பல் இருந்த கடல் பகுதிக்குச் சென்றது. எண்ணெய் கப்பலிலிருந்த அகதிகளை மீட்புக் கப்பலுக்கு மாற்றிக் கொண்டிருந்தபோது, ஏராளமான அகதிகளை ஏற்றி வந்த பல ரப்பர் படகுகள் இருளில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதில் வந்தவர்கள் நார்வே மீட்புக் கப்பலில் ஏற முயற்சி செய்தனர். ஆனால் மீட்புக் கப்பல் முழுவதும் ஏற்கெனவே அகதிகள் நிறைந்து காணப்பட்டனர்.
எனவே நார்வே மீட்புக் கப்பலைச் சேர்ந்த மீட்புப் படகுகள் மூலம் அகதிகள் மீட்கப்பட்டனர். கப்பலில் தங்களை ஏற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று அஞ்சிய 25 அகதிகள் தங்கள் படகிலிருந்து கடலில் குதித்தனர். அனைத்து அகதிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இத்தாலிய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மொத்தத்தில் நடுக்கடலில் தத்தளித்த சுமார் 2,400 அகதிகள் மீட்கப்பட்டு இத்தாலி அகதிகள் மீட்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைத் தவிர, கடலில் மிதந்த 14 அகதிகளின் உடல்களை மீட்புக் கப்பல் ஊழியர்கள் மீட்டனர் என்று இத்தாலிய கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.