மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “காந்தி’ என்ற ஆங்கிலப் படத்தை இயக்கி, அகடமி விருது பெற்ற புகழ்பெற்ற இயக்குனர் ரிச்சர்ட் அட்டென்பரோ நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல ஆங்கில திரைப்பட நடிகரும், இயக்குனருமான ரிச்சர்ட் அட்டென்பரோ சில காலமாக உடல்நலமின்றி இருந்தார். நேற்று மாலை இங்கிலாந்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் மரணம் அடைந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ரிச்சன் அட்டென்பர்ரோ கடந்த 1982ஆம் ஆண்டில் வெளியான ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தார். இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து கெளரவப்படுத்தியது.
‘காந்தி படத்தை இயக்கியதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரிச்சன் அட்டென்பரோ,.இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் விருது பெற்ற இவர், பல ஆங்கிலப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்ததுடன் பல்வேறு திரைப்பட விழாக்களின் நடுவர்கள் குழுவிலும், விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
ரிச்சன் அட்டென்பரோ ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய காரியங்களுக்கான நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றி உள்ளார். பிரிட்டனின் உயரிய ‘லார்ட்’உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.