ரிஷிகளில் அப்படியென்ன பெருமை வசிஷ்டருக்கு?

LRG_20150819140833857039

எளிதாகப் பாராட்டாத ஒருவர் பாராட்டினால், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று வழக்குச் சொல்லை பலரும் பயன்படுத்துவதைக் கேட்டிருக்கிறோம். அப்படியென்ன பெருமை வசிஷ்டருக்கு. சப்தரிஷிகளில் ஒருவர் என்பதா இன்றுவரை கற்புடைய பெண்ணுக்கு அடையாளம் காட்டப்படும் அருந்ததியின் கணவர் என்பதா, பாற்கடல் நாதனான பரமன், ராமனாக அவதரித்தபோது அவனுக்கு குருவாக இருந்து கற்பித்தவர் என்பதா அல்லது ராமனுக்கு மன்னனாக மகுடாபிஷேகம் செய்வித்தார் என்பதா? இப்படி ஏராளமான செய்திகளை வசிஷ்டரைக் குறித்து சொல்லலாம். என்றாலும் மிக மிக்கியானது. அவருடைய மைந்தனான  சக்தி ரிஷி கொல்லப்பட்ட சமயத்திலும், சினங்கொண்டு சபிக்காத மனஅடக்கம், இது, சுலபமானதல்ல. அதானல்தான் பிரம்மரிஷி என்ற பெரும்பெயர் அவருக்கு உரித்தாயிற்று. ரிஷித்வம் என்பது சகலத்தையும் சமமாக பாவிப்பது; பரம ஞானத்தில் தோய்ந்திருப்பது; நல்லதை மட்டுமே வெளிப்படுத்துவது; சலனங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குவது.

இப்படியெல்லாம் திகழ்ந்தவர் மகரிஷி வசிஷ்டர் மிகச்சிறந்த தவசியான இவருடைய ஆஸ்ரமம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒரே இடத்தில் தங்கியிருக்கும் வழக்கமில்லாத ரிஷிகள். அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் தவச்சாலைகளை அமைந்திருக்கலாம். அவற்றில் குறிப்பிடத்தக்கது, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அமைந்துள்ள வசிஷ்டரின் ஆஸ்ரமம்.  மலைகள் சூழ்ந்த பிரதேசத்தில் சந்தியா, லலிதா மற்றும் காந்தா நதிகளுக்கு இடையில் சந்தியாசல் மலையில் அமைந்துள்ளது இந்த ஆஸ்ரமம்.  ஏழு சக்தி பீடங்களில் முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த பீடத்தை சிவசக்தி பீடம் என்றும் தாரா பீடம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இங்குள்ள கோயில் கி.பி. 1764ல் ராஜேஸ்வர் சிங் என்னும் அஹோம் வம்சாவளியின் கடைசி மன்னரால் புதுப்பித்து கட்டப்பட்டதாகவும், அதற்கென்று மன்னர் 835 பிகாக்கள் நிலம் ஒதுக்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

காளிகா புராணத்தில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. முன்பு மாமுனி வசிஷ்டர் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தைத் தேடி, இந்த மூன்று நதிகள் சூழ்ந்த மலைப்பிரதேசத்தின் இயற்கை அழகில் மனம் ஈர்க்கப்பட்டு இங்குள்ள குகையில் ஒரு ஆஸ்மரத்தை அமைத்துத் தவமியற்றினார். இங்குள்ள குகைக்கருகில் பாயும் நீர் வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் அம்சமாக விளங்குகிறது. இக்கோயிலிலுள்ள சிவபெருமான் மங்களேஸ்வர் என்று அழைக்கப்படுகிறார். இப்போது கோயிலில் சிவலிங்கம் காணப்படவில்லை. இக்கோயிலிலுள்ள கிணறுகளில் அது மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இக்கோயிலைச் சுற்றி ஓடும் ஆற்று நீர் மருத்துவ குணங்களைக் கொண்டதாகத் திகழ்கிறது. அதனால் இதில் குளிப்பவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அடைகிறார்கள். பல ஆயிரக்கணக்கான  யாத்ரீகர்கள் இக்கோயில் மற்றும் ஆஸ்ரமத்தை மன அமைதிக்காகவும், விசேஷ சத்தி பீடங்களில் ஒன்றானதால் வழிபாட்டுக்காகவும் வருகிறார்கள். அரசாங்கமும் கோயிலின் முக்கியத்துவம் கருதி தூய்மையாகவும் அமைதியாகவும் பராமரிக்கிறது. இந்த ஆசிரமத்தில்தான் வசிஷ்டர் தன் உடலை நீத்து முக்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆகையால், இக்கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தன்னுடைய வழிபாட்டுக்காக ஒரு சிவலிங்கத்தை அமைத்து வழிபட்டு வந்துள்ளார். அதனால் அதற்கு வசிஷ்டர் கோயில் என்றும், அவர் தவம் இயற்றிய ஆஸ்ரமம் வசிஷ்டாஸ்ரமம் என்றும் அழைக்கப்பட்டது. செல்லும் வழி: ஆகாய மார்க்கமாக (எல்ஜிபி)ஏர்போர்ட் சென்று அங்கிருந்து பால்டன் பஜார் சென்றடையலாம். ரயில் மார்க்கமாக பால்டன் பஜார் ரயில் நிலையத்தில் இறங்கி கோயிலை அடையலாம். பேருந்து மார்க்கமாக: பால்டன் பஜார் சென்று கோயிலை அடையலாம். இங்கு தங்குமிடம் மற்றும் சிற்றுண்டி வசதி உண்டு.

Leave a Reply