ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்னும் தனது முடிவை அறிவிக்காமல் உள்ளார். நேற்று தே.மு.தி.க. வர்த்தக அணி மாநில செயலாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன்-பஞ்சவர்ணம் தம்பதியர் மகன் உதயதினேஷ் திருமணம், வானகரத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல் குழப்பமாக பேசி முடித்துவிட்டு சென்றதால் தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த திருமண விழாவில் விஜயகாந்த் பேசியதாவது, “இன்று மணவிழா காணும் தம்பதியர் நீண்டகாலம் சீராடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம். நானும், எனது மனைவியும் திருமணம் முடிந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். அதுபோல் மணமக்களும் வாழ வேண்டும்.
இந்த திருமணவிழாவில் அரசியல் பேச வரவில்லை ஆனாலும், எல்லோரும் ஆர்.கே.நகர் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடுமா? போட்டியிடப் பயமா என்று எல்லாம் கேட்கிறார்கள். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், வெற்றிவேல் ஏன் ராஜினாமா செய்தார் என்று அவரிடம் யாரும் கேட்கவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை புறக்கணிப்பதாக சில கட்சிகள் அறிவித்து இருக்கின்றன. அவர்களிடம் போய் ஏன் போட்டியிடவில்லை என்று யாரும் கேட்கவில்லை.
அவர்களிடம் போய் கேளுங்கள். அதை விட்டு விட்டு தே.மு.தி.க. போட்டியிடுமா? என்று மட்டும்தான் கேட்கிறார்கள். எங்களுக்கு போட்டியிட எந்த பயமும் இல்லை. மணமக்களை வாழ்த்தவே வந்தேன். மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று பேசிவிட்டு சென்றுவிட்டார். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி தினம் என்ற நிலையில் இன்னும் விஜயகாந்த் தனது முடிவை அறிவிக்காமல் இருப்பது அனைவரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.