சென்னை மருத்துவமனையில் ஆர்.எம்.வீரப்பன் அனுமதி
முன்னாள் தமிழக அமைச்சரும் எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நேற்று தன்னுடைய வீட்டில் குளியல் அறைக்கு செல்வதற்காக, தான் அமர்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்த போது, திடீரென தடுமாறி கீழே விழுந்ததாகவும் இதன் காரணமாக அவருக்கு இடுப்பில் பலத்த அடிபட்டதாகவும் கூறப்படுகிறது. கீழே விழுந்ததால் வலியால் துடித்த அவரை, உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மயில்வாகனன் ஆர்.எம்.வீரப்பனுக்கு இடுப்பில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்தார். தொடர்ந்து அவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்.எம்.வீரப்பனை, அவருடைய குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். தற்போது ஆர்.எம்.வீரப்பன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில தினங்களில் அவர் வீடு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.