நிலநடுக்க நேரத்தில் வங்கியினுள் புகுந்த கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நேற்று மதியம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலநடுக்கம் உணரப்பட்ட போது பெரிய கட்டிடங்கள், அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் அவசர அவசரமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடி வந்தனர்.
இந்நிலையில் டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்குள்ள சிண்டிகேட் வங்கியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பீதியின் காரணமாக கட்டடத்தை விட்டு வெளியேறினர். ஆனால் வங்கியில் அதிகளவு பணம் இருந்ததால் வங்கிக்குள் கேஷியர் மட்டும் தனியாக இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட இரண்டு கொள்ளையர்கள் வங்கியினுள் நுழைந்து துப்பாக்கியை காட்டி கேஷியரை மிரட்டி, ரூ.21 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது குறித்த வங்கி கேஷியர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதேபோன்று நிலநடுக்கத்தை பயன்படுத்தி வேறு எங்கேனும் கொள்ளை நடந்துள்ளா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.