வைகோவை விமர்சனம் செய்தாரா ரோபோ சங்கர்?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சர்ச்சைகுரிய வகையில் டுவிட்டரில் விமர்சனம் செய்ததாக ஒரு வதந்தி கடந்த இரண்டு நாட்களாக வெகுவேகமாக பரவி வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதிமுக தொண்டர்கள் ரோபோசங்கருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைகோ குறித்து தான் எந்த கருத்தும் கூறவில்லை என்றும், தனது பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போலி டுவிட்டர் அக்கவுண்டில்தான் அவ்வாறான கருத்துக்கள் இருப்பதாகவும் ரோபோ சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது: ரோபோ சங்கர் என்ற என்னுடைய பெயரில் ஒரு போலியான டுவிட்டர் ஐடி மூலம் அய்யா வைகோ குறித்து நான் பேசியதாக வதந்தி பரவி வருகிறது. அது என்னுடைய ஐடி கிடையாது. இதுகுறித்து எனக்கு நிறைய போன் அழைப்புகள் வருகிறது. அவர்களிடத்தில் நான் விளக்கம் அளித்து வருகிறேன். அந்த ஐடியில் இருந்து வெளிவரும் எந்த செய்திக்கும் நான் பொறுப்பு இல்லை. இந்த விஷயம் மட்டுமின்றி இதுபோன்று நிறைய விஷயங்களில் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும்படி சிலர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ மூலம் அந்த செயல்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை பதிவு செய்து கொள்கிறேன். காவல்துறை அதிகாரிகள் தயவுசெய்து இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று ரோபோ சங்கர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோவிற்கு பின்னர் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.