ரோஹித் சர்மா அபார சதம்: தொடரை வென்றது இந்தியா
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி டி-20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த இரண்டு டி20 போட்டிகளில் இருநாடுகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி பிரிஸ்டல் நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 198 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ராய் 67 ரன்களும், பட்லர் 37 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 199 என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி 56 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இதில் 11 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் விராத் கோஹ்லி 43 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற புள்ளிகணக்கில் தொடரை வென்றது. ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது.