பேருந்தில் புத்தகம் படித்து கொண்டே பயணம் செய்தால் இலவசம். புதுமையான அறிவிப்பு
கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் கலாச்சாரம் வந்த பின்னர் புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. அவ்வப்போது புத்தக கண்காட்சி நடத்தி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டாலும், அந்த புத்தகங்களை வாங்கி செல்பவர்கள் புத்தகங்களை படிக்கின்றார்களா? என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் தற்போது ஸ்மார்ட்போனிலேயே விரும்பிய புத்தகங்களை டவுன்லோடு செய்து படிக்கும் வசதி வந்துவிட்டதால், புத்தகம் படிக்கும் நிலை தற்போது கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்த ஐரோப்பா கண்டத்தில் உள்ள ரோமானியா நாட்டில் க்ளூஜ்-நபோக்கா என்ற நகரில் புத்தக பிரியர் விக்டர் மிரான் என்பவரின் அறிவுரைப்படி புத்தகங்களை படித்து கொண்டே நகரப் பேருந்துகளில் செல்பவர் டிக்கெட் எடுக்க தேவையில்லை என்றும், அவர்களுக்கு பேருந்து நிறுவனம் இலவச சேவை செய்யவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
விக்டர் மிரான் இந்த அறிவுரையை கடந்த ஆண்டு அந்நகர மேயருக்குக் கூறினார். சோதனை முயற்சியாக ஒரு வாரம் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் இத்திட்டம் அந்நாட்டில் மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டிலும் விரைவில் செயல்படுத்தப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
அரசாங்கம் மக்களை புத்தகம் படிக்க வைக்க இதுமாதிரி இலவச அறிவிப்பை அறிவித்து போராட வேண்டியுள்ளது! எது எதற்கோ இலவசங்கள் கொடுக்கும் நம்முடைய அரசு இதுமாதிரியான இலவச அறிவிப்பை வெளியிடுமா?