மேலும் 2 ஆண்டுகளுக்கு தமிழக ஆளுனரின் பதவி நீட்டிப்பா?
தமிழக ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக அரசு அலுவலக வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.
தமிழகத்தின் 23-ஆவது ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ரோசய்யா பதவியேற்றார். எனவே அவரது பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதி (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்நிலையில் புதிய ஆளுநரை தேர்வு செய்ய மத்திய அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இதுவரை யாரும் மத்திய அரசால் நியமனம் செய்யப்படாததால், ரோசய்யாவே ஆளுநராகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒரு ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைய 15 நாள்களுக்கு முன்பே புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படுவது வழக்கம். அப்போதுதான் முந்தைய ஆளுநர் தனது அலுவல்களை முடித்து ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறும் பணிகளைக் கவனிப்பார். ஆனால் ரோசய்யாவின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இதுவரை அதுபோன்ற அடையாளங்கள் எதுவும் ஆளுநர் மாளிகையில் தென்படவில்லை. வழக்கமான பணிகளே நடந்து வருவதால் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட்டிப்பு உத்தரவு வந்த பின்னரே அது ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டா என்பது தெரிய வரும்’ என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுனர் நீட்டிப்பது தமிழகத்தில் புதிதில்லை. இதற்கு முன்பாக, சுர்ஜித் சிங் பர்னாலா 1990 முதல் 1991 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் இடைவெளியில் இரு முறை தமிழக ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், பதவி நீட்டிப்புக்கான உத்தரவு வரப்பெற்றால், தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆளுநர் பதவி வகிப்பவர் என்ற பெருமையை ரோசய்யா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.