சமீப காலமாக ஒருசில மதவாதிகள் இறந்தவர்களை எழுப்புவதாகவும், குருடர்கள் மற்றும் ஊமையர்களை பார்க்க வைக்கவும் பேசவைக்கவும் செய்வதாகவும் மூட நம்பிக்கைகளை பரப்பி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வித்தியாசமான போஸ்டர் ஒன்றை திருவாரூரில் ஒட்டி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஓடி வருக! கோடி பெருக ! எனும் வரிகளில் தொடங்கும் இந்த போஸ்டரில், இயல்பாக செய்ய முடியாத, அறிவியலால் கூட சாத்தியமில்லாத சில செயல்கள் கூறப்பட்டுள்ளன. அற்புதம் மூலம் குருடரை பார்க்க வைத்தால், ஊமையை பேச வைத்தால், முடவரை நடக்க வைத்தால், இறந்தவருக்கு உயிர்கொடுத்தால் ஒரு கோடி ருபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சலுகை அனைத்து மதத்தினர்களுக்கும் உண்டு என்றும், அற்புதங்கள் நிகழ்த்திய உடனே பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு சென்னை முகவரியும் போன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் திருவாரூர் மட்டுமின்றி தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலர் அப்துல் ரகுமான் அவர்கள் கூறும்போது “ மூட நம்பிக்கை, வரதட்சணை போன்றவைகளை தடுத்து நிறுத்த நாங்கள் முன்னிற்கிறோம். ஏற்கனவே பில்லி சூனியம் வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 5௦ லட்சம் பரிசுதொகை அறிவித்திருந்தோம். அதற்கு முன் வந்தவர்களிடம் எங்கள் அனைத்து உடைமைகளையும் (முடி, ஆடை) போன்றவை தந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நாற்பத்து எட்டு நாளில் தற்கொலை செய்து கொள்வார் என்று கூறி சபதம் செய்தார் ஒருவர். ஆனால் நாற்பத்து எட்டு நாட்களுக்கு பின்னும் தற்கொலை செய்ய வேண்டியவர் கம்பீரமாக நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்.
எங்களின் இந்த முயற்சியின் நோக்கம் தவறான பிரச்சாரங்களால் யாரும் மக்களை முட்டாளாக்கக் கூடாது என்பதுதான். அப்படி யார் செய்தாலும், அதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது. கடவுளின் பெயரால் யாரும் ஏமாற்றவும் கூடாது, யாரும் ஏமாறவும் கூடாது. இது எந்த குறிப்பிட்ட மதத்தினரை குறிப்பிட்டு அல்ல. இந்த சலுகையை இந்து, இஸ்லாம், கிறித்துவம் என எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பயன்படுத்தி நாங்கள் சொல்லுகின்ற அற்புதத்தை நிகழ்த்தி ஒரு கோடி ருபாய் பரிசு தொகையை பெற்று கொள்ளலாம்“ என்றார்.