ஷாருக்கான் நடித்த விளம்பர நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம். நீதிமன்றம் அதிரடி
கடந்த பல வருடங்களுக்காக பெண்களின் சிவப்பழகுக்காக ஏராளமான நிறுவனங்கள் க்ரீம்களை வெளியிட்டு புதுப்புது விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், சமீபத்தில் இமாமி என்ற நிறுவனம் ஆண்கள் சிவப்பழகு பெற ஒரு க்ரிமை தயார் செய்தது. இந்த க்ரீம் விளம்பரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விளம்பரத்தை பார்த்த டெல்லியை நிகில் என்ற 23 வயது மாணவர், இந்த க்ரீமை தான் வாங்கி ஒரு மாத காலமாக பயன்படுத்தியதாகவும், ஆனால் விளம்பரத்தில் ஷாருக்கான் கூறியது போல, தன்னுடைய முகம் சிவப்பாக மாறவில்லை என்று கூறி டெல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி நீதிமன்றம், இமாமி நிறுவனத்துக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் மாணவர் நிகிலின் வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும், உடனடியாக அந்த விளம்பரத்தை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.