கங்கையை தூய்மைப்படுத்தும் ‘நமாமி கங்கா’ திட்டத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.

namamiபாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான கங்கை நதியை தூய்மைப்படுத்தும் ‘நமாமி கங்கா’ என்ற திட்டத்துக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் கங்கை நதி தூய்மைப்படுத்தும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: “கடந்த 30 ஆண்டுகளில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு 4 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து ஐந்து ஆண்டுகளில் இத்திட்டதை செயல்படுத்தி முடிப்பதே இலக்கு. 1985-ல் இருந்து கங்கை நதியை தூய்மைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கும் ரூ.4,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த முறை மத்திய அரசு தனது இலக்கை அடைவதில் உறுதியாக இருக்கிறது.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை திறம்பட முடித்திட கங்கைக் கரையோரம் வாழும் மக்களை பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் முந்தைய அரசுகள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் வகையில், கங்கைக் கரையோர மாநில அரசுகளையும், உள்ளூர் பஞ்சாயத்துகளையும் தூய்மை கங்கா திட்டத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

‘நமாமி கங்கா’ திட்டத்தின் கீழ், கங்கை நதியில் கழிவு நேரடியாக கலப்பது கண்காணிக்கப்படும். கழிவு நீரை சுத்திகரித்து பின்னர் அது நதியில் கலக்க அனுமதிக்கப்படும். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே, சமூக – பொருளாதார நலன் சார்ந்தது. கங்கை நதியை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் லட்சியம்.”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply