விஜயகாந்திடம் ரூ.500 கோடி கருணாநிதி பேரம் பேசியதாக வைகோ கூறும் குற்றச்சாட்டு நியாயம்தானா?
தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைத்து கொள்ள ரூ.500 கோடி வரை திமுக தலைவர் கருணாநிதி பேரம் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக கூட்டணியில் இணைய தேமுதிக பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தான் விலைபோக மாட்டேன் என்று விஜயகாந்த் கூறி வந்தாலும், பாஜகவிடமும், திமுகவிடமும் அவர் பேரம் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. தற்போது வைகோ கூறிய குற்றச்சாட்டில் இருந்து தேமுதிகவும், திமுகவும் பேரம் பேசியது உறுதியாகியுள்ளது.
ரூ.500 கோடியும், 80 சீட்டுக்களும் திமுக தருவதாக ஒப்புக்கொண்டதாகவும், அதை தேமுதிக தலைவர் உதறி தள்ளிவிட்டதாகவும் வைகோ கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நடந்தது. என்னவெனில் அதைவிட அதிகமாக தேமுதிக எதிர்பார்த்ததாகவும், அந்த பேரம் படியாததால்தான் தேமுதிக அந்த கூட்டணியில் இணையவில்லை என்றும் இருதரப்பு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறுகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியை மட்டுமே குற்றஞ்சாட்டும் வைகோ, விஜயகாந்த் என்னமோ உத்தமர் போலவும் அவர் பேரத்தில் மடியாத தர்மர் போலவும் பேசுவது வேடிக்கையான ஒன்று என்று அரசியல் விமர்சகர்கள் சமூக இணையதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்ததை கண்டு பயந்துதான் ஜெயலலிதா, சரத்குமாரை அழைத்து கூட்டணியில் இணைத்துக்கொண்டதாகவும் வைகோ கூறியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி தேமுதிகவுடன் இணைந்தாலும் ஐந்து முதல் பத்து தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று அனைத்து கருத்துக்கணிப்புக்களும் உளவுத்துறை அறிக்கைகளும் கூறி வரும் நிலையில் வைகோவின் இந்த கருத்து சிறுபிள்ளைத்தனமானது என்று கூறப்படுகிறது.