ரூபாய் நோட்டு தடை காலத்தில் கைப்பற்றப்பட்ட கருப்புப்பணம் எவ்வளவு? அருண்ஜெட்லி தகவல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் மிக விரைவில் ரூ.200 நோட்டுக்கள் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் கருப்புப்பணத்தை கைப்பற்றும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் தடையால் கணக்கில் வராத 5,400 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் இன்றைய கேள்வி நேரத்தில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘நாடு முழுவதும் 5,400 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது. 18 லட்சம் பேர் வங்கியில் செலுத்திய பணத்துக்கும், அவர்கள் கட்டிய வரி விகிதத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 610 கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், 513 கோடி ரூபாய் பணமாக கைப்பற்றப்பட்டது. அதில், 110 கோடி ரூபாய், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள்.
வங்கிகளில் செலுத்தப்பட்ட பணம்குறித்து ரிசர்வ் வங்கி துல்லியமாகக் கணக்கிட்டுள்ளது. அதன் விவரங்களை விரைவில் ரிசர்வ் வங்கி வெளியிடும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம்குறித்த அதிகாரபூர்வ கணக்கீடுகள் ஏதும் இல்லை. இருப்பினும், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப்பணம் குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வருகின்றன. தேவையான நேரத்தில், வெளிநாடுகளில் பணம் பதுக்கும் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’ இவ்வாறு நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.