3 கண்டெய்னர்களில் ரூ.570 கோடி? யாருக்கு சொந்தமானது? தேர்தல் ஆணையம் அதிரடி
இன்று அதிகாலை கோவையில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் ரூ.570 கோடியுடன் 3 கண்டெய்னர்கள் செல்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல்களை அடுத்து அதிரடியாக செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் அந்த 3 கண்டெய்னர்களையும் பறிமுதல் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதலில் ரூ.570 கோடி இந்த மூன்று கண்டெய்னர்களில் இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அந்த கண்டெய்னர்களில் ரூ.195 கோடி மட்டுமே இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாகவும், அந்த பணம் கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் உடன் வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த பணத்தின் பாதுகாப்பிற்காக வந்திருந்த காவல்துறையினர் யூனிபார்மில் இல்லாததால் சந்தேகம் அடைந்த தேர்தல் அதிகாரிகள் வங்கி அதிகாரிகள் வந்து இதனை உறுதிப்படுத்திய பின்னர்தான் கண்டெய்னர்களை விடுவோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, ”அந்த மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் இருப்பதாக வெளியான தகவல் உறுதி செய்யப்படவில்லை. கண்டெய்னர்கள் திறந்து சோதிக்கப்படவில்லை. அவர்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், அந்த கண்டெய்னர்களில் 195 கோடி ரூபாய் இருப்பதாக தெரிகிறது’ என்று கூறியுள்ளார்.