சரத்குமாரின் காரில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துவரும் நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான சரத்குமாரின் காரில் இருந்து ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் சரத்குமார் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்த நல்லூரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வள்ளிக்கண்ணு தலைமையிலான குழுவினர் சரத்குமார் கரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். சரத்குமாரின் காரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 9 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை அவர்கள் கண்டு பிடித்தனர். உடனே அந்த பணம் அனைத்தையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அதை திருச்செந்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கூறும்போது, ”உரிய ஆவணங்கள் இன்றி பணம் அந்த காரில் வைத்திருந்ததை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். அந்த பணத்திற்குண்டான ஆவணங்களை அவர்கள் காட்டும்பட்சத்தில் அந்த பணம் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படும்” என்று கூறினர்.