ஒவ்வொரு மத்திய மந்திரியின் அலுவலகத்திலும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்: ராகுல்காந்தி
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாகியுள்ள நிலையில் இன்று அம்மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி கூறியதாவது:-
பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் எதிர்த்தார். நிதி மந்திரி உள்பட ஒட்டுமொத்த மந்திரிசபைக்கும் தெரியாத வகையில் பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ரகசியமாக வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு முன்னால் அனைத்து மந்திரிகளும் அறைக்குள் போட்டு பூட்டி வைக்கப்பட்டனர். அவர்களில் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் வங்கிகள் கடன் அளிக்க வேண்டும். ஆனால், வங்கி கடன்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள 15 பெரிய தொழில் நிறுவனங்களால் உறிஞ்சப்படுகின்றன. அனில் அம்பானிக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. அவருக்கு உதவுவதற்காக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை இந்த அரசு வழங்கியுள்ளது.
இதுபோன்ற கட்டமைப்பால் நமது வங்கிமுறை நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியும், மெகுல் சோஸ்க்கியும் யார்? ரிசர்வ் வங்கி போன்ற நிதி அமைப்புகளை நீங்கள் மதிக்காதபோது இதைப்போன்றவர்கள் உருவாகிறார்கள். தற்போது பியூஷ் கோயல் தொடர்பான ஊழலும் வெளிவர தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு மத்திய மந்திரியின் அலுவலகத்திலும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் அமர்ந்துகொண்டு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை அவமதித்து சீர்குலைப்பதை தவிர இந்த அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?