ருத்ரம்மாதேவி. திரைவிமர்சனம்
பேய்ப்பட சீசனை அடுத்து தற்போது தொடர்ச்சியாக மன்னர் காலத்து படங்கள் வரத்தொடங்கிவிட்டன. பாகுபலி, புலி படங்களை அடுத்து வந்த மற்றொரு படம்தான் ‘ருத்ரம்மாதேவி. ஆனால் மேற்கண்ட படங்களுக்கு இணையாக இந்த ருத்ரம்மாதேவி இருப்பாரா? என்பதை தற்போது பார்ப்போம்.
ஆண் வாரிசு இல்லாத ராஜ்ஜியமாக காகித்ய நாடு இருந்து வருகிறது. இந்த ராஜ்ஜியத்தை எதிரி நாடுகளும், மன்னரின் பங்காளிகளும் கைப்பற்ற துடிக்கும் நிலையில் ராணிக்கு குழந்தை பிறக்கின்றது. ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தால்தான், எதிரிகளிடம் இருந்து தப்பிக்க முடியும் என நாட்டு மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் ராணிக்கு துரதிஷ்டவசமாக பெண் குழந்தை பிறக்கின்றது. ஆனால் காகித்ய நாட்டின் அமைச்சர் மற்றும்அரசரின் புத்திகூர்மையால், பெண் குழந்தை பிறந்ததை மறைத்துவிட்டு ஆண் குழந்தை பிறந்ததாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
ருத்ரம்மதேவன்’ என்ற பெயரில், பெண் என்றால் என்ன என்பதே தெரியாமல் வளரும் அந்த குழந்தை, வீரதீர செயல்களில் இளவரசனாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில் 14 வயதை நெருங்கியதும் பருவ வயது வரும்போது தான் ஆண் அல்ல பெண் என்று உணரும்போது, அரசரும் அமைச்சரும் ருத்ரம்மதேவனாக வளரும் பெண்ணுக்கு உண்மையை புரிய வைக்கின்றனர். நாட்டு மக்களின் நன்மையை கருதிதான் ஆணாக வளர்க்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து, தொடர்ந்து ஆணாகவே நடித்து வருகிறார்.
இந்நிலையில் எதிர்நாட்டு ஒற்றன் மூலம் ருத்ரம்மாதேவன் ஆண் அல்ல, பெண் என தெரியவந்ததும், எதிரிகளும் பங்காளிகளும் இணைந்து கொண்டு போர் தொடுக்க முயல, ருத்திரம்மதேவன், ருத்திரம்மாதேவியாகி மாறி நாட்டை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்
அனுஷ்கா படம் முழுவதும் முறைப்பாகவே வருகிறார். ஆண் வேடத்திற்கு அவருடைய உடலமைப்பும் உயரமும் சரியாக பொருந்துவதால் இந்த கேரக்டர் அனுஷ்காவிற்கு மிக கச்சிதமாக பொருந்தியுள்ளது என்பது மட்டுமே அவருடைய பிளஸ். மற்றபடி அனுஷ்காவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அவருடைய கேரக்டர் அமைக்கப்படவில்லை என்பது ஒரு சோகமே.
வில்லன்கள் அனைவரும் முட்டாள்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா இலக்கணம் மீண்டும் ஒருமுறை சுமன் கேரக்டர் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசரின் பங்காளிகளாக இருந்து கொண்டு சதி செய்யும் இவர்களை அரசர் ஏன் இத்தனை வருடங்களாக விட்டு வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. மேலும் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை பொதுமக்களிடம் இருந்து எளிதில் மறைத்துவிடலாம். ஆனால் அரண்மனைக்குள்ளேயே 25 வருடங்களாக இருக்கும் பங்காளிகளுக்கும் இது தெரியவில்லை என்பது படத்தின் திரைக்கதைக்கு மிகப்பெரிய ஓட்டை
அமைச்சராக வரும் பிரகாஷ்ராஜ் கேரக்டரில் வலிமை இல்லை. கோணகனா ரெட்டியாக வரும் அல்லு அர்ஜூன் காட்சிகள் ஓரளவுக்கு சுவாரசியாக இருந்தாலும், கடைசியில் அவர் யார்? என்ற சஸ்பென்ஸை இயக்குனர் உடைக்கும்போது ஆடியன்ஸ் யாருக்கும் எவ்வித ஆச்சரியமும் ஏற்படவில்லை. அவருடைய கேரக்டர் கடைசியில் இப்படித்தான் இருக்கும் என்பதை படம் பார்க்கும் எல்.கே.ஜி குழந்தைகூட ஊகித்துவிடும்.
‘ஓகே ஓகே’ புகழ் நித்யாமேனன், ‘மெட்ராஸ்’ கேதரின் தெரசா ஆகிய இரண்டு நல்ல நடிகைகளை இந்த படத்தில் வீணடித்திருக்கின்றனர். ருத்ரம்மாதேவன், பெண் இல்லை ஆண் தான் என்பது தனக்கு ஏற்கனவே தெரியும் என்று நித்யாமேனன் சொல்லும் காட்சி மட்டும் ஓகே
இந்த படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் கார்ட்டூன் சேனலில் வரும் அனிமேஷன் படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. குதிரையில், யானையில் வீரர்கள் செல்லும் காட்சிகள் குழந்தைத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாகுபலி, புலி படங்களில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகளில் பத்து சதவீதம்கூட இந்த படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.
பிரமாண்டமான கோட்டைகள், காஸ்ட்லியான காஸ்ட்யூம்கள் ஆகியவற்றில் கவனத்தை செலுத்திய இயக்குனர் குணசேகர் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வலுவில்லாத திரைக்கதையால் படம் முழுவதுமே மெதுவாக நகர்கிறது. வசனங்கள் மன்னர் காலத்துக்கு பொருந்தும்படியாக இல்லை. ஓளிப்பதிவு, எடிட்டிங் ஓகே ரகம்.
படம் ஓரளவுக்காவது உட்கார்ந்து பார்க்க முடிகிறது என்றால் அது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையால்தான். ஆனாலும் பாடல்கள் கேட்கும்படியாக இல்லை.
மொத்தத்தில் ருத்ரம்மாதேவி, ருசியில்லாத தேவியாக உள்ளார்.