சென்னையில் மக்கள் நெரிசல் மிக்க புரசைவாக்கம் பகுதியில், அரசு பேருந்து திடீர் என தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பட்டினப்பாக்கத்திலிருந்து வில்லிவாக்கம் வரை செல்லும் 27 D டீலக்ஸ் பேருந்து நேற்று இரவு மோட்சம் நிறுத்தத்தில் நின்றபோது, அந்த பேருந்து திடீர் என தீப்பிடித்து எரிந்தது.
திடீரென பேருந்தில் முன் பகுதியிலிருந்து புகை வெளியேறுவதை கண்ட பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறினர். இதனால் அப்பேருந்தில் பயணித்த சுமார் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதனால் பேருந்து முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது.
3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 50 நிமிடங்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தால் புரசைவாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.இவ்விபத்து குறித்து கீழ்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.