பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகிய மூன்று இணையதளங்களை விரைவில் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய அரசு மிரட்டல் விடுத்துள்ளதால் இணைய உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று இணையதளங்களும் தங்கள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக நடந்து கொள்வதாக ரஷ்ய அரசு புகார் கூறியுள்ளது.
இது குறித்து ரஷ்யாவின் இணைய பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராஸ்காம்னட்சார் அவர்கள் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியபோது “ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகிய மூன்று அமெரிக்க இணைய நிறுவனங்களுக்கும் எங்கள் நாட்டின் இணைய சட்ட திட்டங்களை மீறி வருவது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளோம். ரஷ்யாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் வலைப்பூ எழுத்தாளர்களுக்கு (bloggers) இம்மூன்று நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருகின்றன. அரசுக்கு எதிராக செயல்படுபவர்களைப் பற்றி தகவல் தெரிவிக்குமாறு மூன்று நிறுவனங்களிடம் பலமுறை வலியுறுத்தியும், அவற்றை ஏற்க இந்த மூன்று நிறுவனங்களும் மறுத்து வருகின்றன. இனியும் இது தொடர்ந்தால், மூன்று இணையதளங்களும் எந்த நேரத்திலும் முடக்கப்படலாம்.” என்று அவர் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்த ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் ரஷ்ய அரசு கேட்டுள்ள பயனர்களின் தகவல்களை சேகரித்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்களை தாங்கள் அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் விளக்கமளித்தபோது ஏற்கனவே 5 சதவீத பயனர்களின் விவரங்களை கொடுத்துவிட்டதாகவும், பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டே தாங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.