ரஷ்ய நிதியமைச்சர் அதிரடி கைது. 20 லட்சம் டாலர் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு
ரஷியாவின் நிதியமைச்சர் அலெக்சி உல்யுக்காயேவ் என்பவர் அந்நாட்டில் இயங்கிவரும் பேஷ்னெஃப்ட் என்ற பெட்ரோலிய நிறுவனத்தின் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை சற்று தூக்கலாக காட்டி அறிக்கை தயாரிக்க ஒத்துழைப்பு தருவதாக கூறி அதற்கு 20 லட்சம் டாலர்களை லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் நிதி அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரஷ்ய நிதியமைச்சர் கேட்ட லஞ்சத்தை தர பெட்ரோலி நிறுவனமும் சம்மதம் தெரிவித்ததாகவும் இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான 50 சதவீதம் பங்குகளை ரோஸ்னெப்ட் நிறுவனம் 500 கோடி டாலர்களுக்கு வாங்கியதாகவும் கூறப்படுகிறது
இந்த ஊழலுக்காக பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து 20 லட்சம் டாலர்களை லஞ்சமாக வாங்கியபோது நிதித்துறை அமைச்சர் அலெக்சி உல்யுக்காயேவ்-வை ரஷிய நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தது.
கடந்த 2013ஆம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அலெக்சி உல்யுக்காயேவ் பல ஆண்டுகளாக ரஷியா நாட்டின் மத்திய வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வங்கியபோது கையும் களவுமாக பிடிப்பட்டதால் தற்போது இவர்மீது விரைவில் வழக்கு தொடர ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.