சபரிமலையில் இந்த ஆண்டுக்கான ’மண்டல காலம்’ தொடங்கியது. மண்டல காலத்தின் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கார்த்திகை 1ம் தேதி முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜைகள் ஒரு ’மண்டல காலம்’ என அழைக்கப்படுகிறது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று அதிகாலை 4 மணிக்கு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதுடன், இந்த ஆண்டுக்கான ’மண்டல காலம்’ தொடங்கியது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு, ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின், கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18-ம் படியேறுவதற்கான ’கியூ’ சரங்குத்தியை கடந்து காணப்பட்டது. இதனால் 3 மணி நேரம் ’கியூ’ வில் நின்றுதான் தரிசனம் நடத்த முடிந்தது. சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த போலீசார் சிரமப்பட்டனர். நெய் அபிஷேகத்துக்கும் நீண்ட ’கியூ’ காணப்பட்டது. நேற்று காலை நடை திறந்த போது கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார், தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், உறுப்பினர் சுபாஷ்வாசு, கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் உள்ளிட்டோர் சன்னிதானத்தில் இருந்தனர். பின், சபரிமலையை பக்தர்களே சுத்தமாக பராமரிக்கும் ’புண்ணியனம் பூங்காவனம்’ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். சன்னிதானத்தில் ஸ்ரீகோயிலின் வலது புறம், நிர்வாக அலுவலகத்தின் எதிரில் புதிதாக துலாபார தராசு அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் சிவகுமார் தொடங்கி வைத்தார். தந்திரி கண்டரரு ராஜீவரரு குத்துவிளக்கேற்றினார்.