கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் தொடங்கி 41நாள் நடைபெறும் மண்டலகால பூஜைகள் பிரசித்தி பெற்றதாகும். இதையொட்டி நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை வருவது வழக்கம். இவ்வருட மண்டல காலபூஜைகள் கார்த்திகை முதல் தேதியான இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ்மோகனரர் முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடைதிறந்து தீபாராதனை நடத்தினார். பின்னர் மேல் சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி 18ம்படி வழியாக கீழே இறங்கி அங்குள்ள நெய்தேங்காய் எரிக்கும் ஆழியில் தீமூட்டினார்.
இதையடுத்து புதிய மேல்சாந்திகளான சங்கரன் நம்பூதிரி, உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரை கிருஷ்ணதாஸ் நம்பூதிரி கைப் பிடித்து 18ம்படி வழியாக கோயிலுக்கு அழைத்து சென்றார். பின்னர் புதிய மேல்சாந்திகள் இருவரும் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இவர்களை கோயிலுக்கு அழைத்து சென்று தந்திரி கண்டரர் மகேஷ்மோகனர் மூலமந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். நேற்று கோயிலில் வேறுபூஜைகள் நடக்கவில்லை. இரவு 10 மணியளவில் ஹரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்பட்டது. முதல்நாளான நேற்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோயில் நடையையும், உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி மாளிகைப்புரம் கோயில் நடையையும் திறந்து பூஜைகள் தொடங்குவர். இன்று முதல் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட வழக்கமான பூஜைகள் தொடங்கியது. இன்று முதல் டிசம்பர் 27ம்தேதி வரை தினமும் அதிகாலை 4.30 மணி முதல் காலை 11 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும். 41வது நாளான டிசம்பர் 27ம்தேதி பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவுடன் மண்டலகால பூஜை நிறைவடையும். மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை டிசம்பர் 30ம்தேதி மாலை திறக்கப்படும்.