சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடக்கும்போது சச்சினை தனக்கு யார் என்றே தெரியாது என்று கூறிய ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு எதிராக சச்சின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் களம் இறங்கி மரியாவை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா இதுகுறித்து கூறும்போது, “சச்சின் என்ன கடவுளா? அவரை தெரியாது என்று கூறியதை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக கருதுகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜுவாலா கட்டாவிடம் செய்தியாளர்கள் ரஷ்ய வீராங்கனை சச்சினை தெரியாது என்று கூறியது குறித்து கேட்டபோது, “உலகில் கிரிக்கெட் விளையாட்டு 12 நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகிறது. டென்னிஸ் 200 நாடுகளிலும், பேட்மிண்டன் 150 நாடுகளிலும் விளையாடப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலானோர்களுக்கு கிரிக்கெட் என்ற விளையாட்டு இருப்பதே தெரியாது. உண்மை நிலை இப்படி இருக்கும் போது ஷரபோவாவை குறை கூறுவது கொஞ்சம்கூட அர்த்தமில்லை.
இந்த விஷயத்தை சர்ச்சைக்குள்ளாக்குவது உண்மையிலேயே முட்டாள்தனமானது. சச்சின் என்ன கடவுளா? அவரை தெரிந்து கொள்ளாதது ஒரு குற்றமா? மரியாவுக்கு சச்சினை தெரியாது என்றால் தெரியாது என்றுதான் கூறுவார்?அதில் என்ன தவறு இருக்கிறது? சச்சினுக்கு வக்காலத்து வாங்கும் பலருக்கு இந்திய ஹாக்கி அணியின் தலைவர் யார் தெரியுமா? என்று அதிரடியாக கூறினார்.
இவருடைய கருத்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.