கடந்த காங்கிரஸ் அரசினால் நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் நாடாளுமன்ற விவகாரங்களில் பங்கேற்காதது குறித்து விளக்கமளித்துள்ளார்.
கடந்த காங்கிரஸ் அரசு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஓட்டு வேட்டைக்காக சச்சின், மற்றும் நடிகை ரேகா ஆகிய இருவரையும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமித்தது. சச்சின் மற்றும் ரேகாவின் ரசிகர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருவருக்கும் எம்.பி பதவி கொடுத்த நிலையில், இவர்கள் இருவரும் அவைக்கு சுத்தமாக வருவதே கிடையாது. எனவே, அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து உறுப்பினர்கள் பதவியை ரத்து செய்து அந்த இடங்களை காலியாக அறிவிக்க வேண்டும்” என எதிர்க்கட்சியினர் நேற்று வலியுறுத்தினர். இதனால் மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது, “அரசியலமைப்பு சட்ட விதி எண் 101-ன் படி ஓர் உறுப்பினர் 60 நாட்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்தால்தான் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரது இடம் காலி என அறிவிக்கப்படும். ஆனால் சச்சின் டெண்டுல்கர் 40 நாட்கள் மட்டுமேஅவைக்கு வரவில்லை. ரேகா அதைவிட குறிந்த தினங்கள் தான் அவைக்கு வருகை தரவில்லை. எனவே இவர்கள் இருவரும் விதியை மீறவில்லை என்பதால் நடவடிக்கை முடியாது என்று கூறினார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து சச்சின் டெண்டுல்கர் இன்று விளக்கமளித்துள்ளார். டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”என் மீதான விமர்சனங்கள் தேவையில்லாதது. மாநிலங்களவையில் பங்கேற்காதது எனது தனிப்பட்ட விஷயம். இதற்காக என்னிடம் யாரும் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இதற்காக நான் யாரையும், எந்த அமைப்பினையும் குறைசொல்லவோ, அவமதிக்கவோ விரும்பவில்லை. எனது சகோதரருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரின் மருத்துவ சிகிச்சை காரணமாக சென்று விட்டதால், நாடாளுமன்ற விவகாரங்களில் பங்கேற்க முடியவில்லை” என்றார்.