கிரிக்கெட் போட்டியின் மைதானத்தில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையை பிடித்து நெஸ் வாடியா இழுத்ததை தான் பார்த்ததாக ப்ரித்தி ஜிந்தா மற்றும் நெஸ்வாடியா ஆகிய இருவரின் பொதுவான நண்பர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் நேற்று சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரும் தனது சாட்சியத்தை போலீஸார் முன் வழங்கியுள்ளார்.
பாலிவுட் நடிகையும், கிங்ஸ் IX பஞ்சாப் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, அவரது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது கடந்த வாரம் பாலியல் புகார் ஒன்றை மும்பை காவல்நிலையத்தில் அளித்தார். அவர் கொடுத்த புகாரையடுத்து நெஸ் வாடியா மீது இந்திய தண்டனை சட்டம் 354வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார் நெஸ்வாடியாவிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த ப்ரீத்தி ஜிந்தா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மும்பை திரும்பினார். பின்னர் நேற்று முன் தினம் நெஸ்வாடியாவின் அத்துமீறல்கள் குறித்த தனது வாக்குமூலத்தை சம்பவம் நடந்த இடமான வான்கடே மைதானத்திற்கு வந்து வழங்கினார். சுமார் இரண்டு மணி நேர விசாரணையில் தன்னிடம் அத்துமீறி நடந்த விவகாரம் குறித்து விரிவான வாக்குமூலம் கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ்வாடியா ஆகிய இருவருக்கும் பொதுவான நண்பரான ஜெய் கனோஜிய என்பவர், நேற்று மும்பை போலீசாரிடம் நேரில் வந்து சாட்சியம் அளித்தார். அப்போது, சம்பவம் நடந்த அன்று நெஸ்வாடியா, ப்ரீத்தியின் வலது கையை பிடித்து இழுத்ததை தான் பார்த்ததாகவும் இருவரும் ஒருவருக்கொருவர் பயங்கர வாக்குவாதத்தில் இருந்ததாகவும், ஆனால் மைதானத்தில் அதிக கூச்சல் இருந்ததால் இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தனக்கு கேட்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் நேற்று சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரும் தனது சாட்சியத்தை நேரில் பதிவு செய்தார். அவர் போலீஸாரிடம் என்ன கூறினார் என்பது குறித்து போலீஸார் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தை பார்த்த மேலும் 2 பேர்கள் நேற்று சாட்சியம் அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.