பாராளுமன்றத்தின் விடுமுறை தினங்கள் முடிந்து இன்று மீண்டும் கூடியது. பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியது, ராகுல்காந்தியும் தனது விடுமுறையை முடித்துவிட்டு நாடு திரும்பியது போன்ற நிகழ்வுகளால் இன்று பாராளுமன்றம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் என்பவர் கூறிய சர்ச்சைக்குரிய ஒரு கருத்து காரணமாக பாராளுமன்றம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிரிராஜ் தனது உரையில் கூறியபோது, ‘ஒருவேளை ராஜிவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணையோ அல்லது கருப்பு நிற பெண்ணையோ திருமணம் செய்திருந்தால் காங்கிரஸ் கட்சி அவரை தலைவராக ஏற்றிருக்குமா? என்ற கேள்வியை கேட்டார்.
கிரிராஜின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜோதிராதித்யா சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தர். ஒரு மத்திய மந்திரி எப்படி இவ்வாறு பேசலாம் என்று கேள்வியெழுப்பிய அவர், தனது மந்திரிசபையில் உள்ள மந்திரியின் பேச்சுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு பதில் கூறிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, கிரிராஜின் பேச்சை யாரும் ஏற்கவில்லை. சிந்தியா எழுப்பியுள்ளது முக்கியமான பிரச்சனை. இது குறித்து கேள்வி நேரத்திற்கு பின் விவாதிப்போம் என்று கூறினார். பின்னர் அவை 11.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.