ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும். சாத்வி பிராச்சி ஆவேசம்
பாலிவுட் பாட்ஷா என்று கூறப்படும் ஷாருக்கான் சமீபத்தில் தனது 50வது பிறந்த நாளை மும்பையில் வெகு சிறப்பாக கொண்டாடினார். இந்த விழாவில் பேசிய ஷாருக்கான், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; இங்கே கருத்து சுதந்திரம் உண்டு. நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இந்நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்குப் பெரும் தடைக்கற்களாக இந்த விஷயங்கள் இருக்கும்” என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே மத சகிப்புத்தன்மை குறித்து பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு வரும் நிலையில் ஷாருக்கானின் இந்த பேச்சு எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போல் உள்ளதாக கூறப்படுகிறது. ஷாருக்கானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி இதுகுறித்து கூறியபோது, ‘ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜண்ட். அவர் கூறிய சகிப்புத்தன்மை குறித்த கருத்திற்காக, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும். மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை, ஷாருக் கான் திருப்பியளிக்க வேண்டும்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்
ஏற்கனவே சாத்வி பிராச்சிதான் ஷாருக்கான் கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோர் நடித்த படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.