கேப்டன் மகனாக இருந்தால் மட்டும் போதாது ஒபாமாவின் மகனாக இருந்தாலும் கொஞ்சமாவது நடிக்க தெரிந்தால்தான் படம் ஓடும். இல்லாவிட்டால் ப்ளாப்தான் என்பதை சண்முகபாண்டியனுக்கு யாராவது முன்கூட்டியே தைரியமாக கூறியிருந்தால் இந்த சகாப்தம்’ படமே வெளிவந்திருக்காது. ஆனால் யாருக்கும் கேப்டனை எதிர்த்து பேசும் தைரியம் இல்லாததால், இந்த கொடுமையை நாமும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுவிட்டது.
கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல் ஜெகனுடன் கில்லி தாண்டு விளையாடும் சண்முகப்பாண்டியன் பார்ட் டைம் ஜாப் ஆக மாமன் மகள் நேஹாவை காதலிக்கின்றார். இந்நிலையில் மலேசியாவில் இருந்து கிராமத்துக்கு வரும் பவர்ஸ்டாரின் பகட்டையும், பளபளப்பையும் பார்த்துவிட்டு சண்முகப்பாண்டியனுக்கும் மலேசியா செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே அப்பாவிடம் காசு வாங்கி பாஸ்போர்ட் எடுத்து மலேசியா செல்ல ஆயத்தமாகிறார்.
இந்நிலையில் ஏற்கனவே வேலை விஷயமாக மலேசியா சென்ற தேவயானியின் கணவர் ரஞ்சித் என்ன ஆனார் என்றே தெரியாமல் இருக்க, சோகமுடன் இருக்கும் தேவயானிக்கு ஆறுதல் சொல்லி, மலேசியா சென்று அவருடைய கணவரை மீட்டு வருவதாக சபதம் செய்கிறார்.
மலேசியாவில் காலடி எடுத்து வைத்த அடுத்த நிமிடமே மலேசிய போலீஸ் சண்முகப்பாண்டியனையும், ஜெகனையும் அரெஸ்ட் செய்கிறது. இந்த நேரத்தில் இதை பயங்கர டுவிஸ்ட் என்றெல்லாம் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது. அவர்களில் ஒரு கில்லி தாண்டு இருந்ததால் அதை ஒரு பயங்கர ஆயுதம் என மலேசிய போலீஸ் நினைத்து கைது செய்துவிட்டதாம். பின்னர் பவர்ஸ்டார் வேலை பார்க்கும் ஓட்டலில் வேலை, பின்னர் கார் கழுவும் வேலை என பார்க்கும் ஜூனியர் கேப்டன் திடீரென துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, மலேசியா போலீஸே பாராட்டும் அளவுக்கு பெரிய பெரிய குற்றவாளிகளை எல்லாம் கண்டுபிடித்து போலீஸிடம் ஒப்படைக்கின்றார்.
இந்நிலையில் ஜெயிலில் இருக்கும் ரஞ்சித்தை சந்திக்கும் சண்முகப்பாண்டியன், அவர் மூலம் இந்தியர்கள் அனைவரையும் மலட்டுத்தன்மை ஆக்குவதற்காக மருந்து தயாரிக்கும் கும்பலை கண்டுபிடித்து அவர்களை கேப்டன் விஜயகாந்த் உதவியுடன் கூண்டோடு அழிக்கின்றார். தியேட்டரில் உள்ள ரசிகர்களும் ஒருவழியாக தப்பித்தோம், பிழைத்தோம் என தியேட்டரில் இருந்து தலைதெறிக்க ஓடுகின்றனர்.
ஆரம்பகால விஜய்காந்திடம் இருந்த கம்பீரம், முக பாவனை, காமெடி சென்ஸ், அதிரடி ஆக்ஷன் ஆகியவற்றில் பத்து சதவீதம் கூட சண்முகப்பாண்டியனிடம் இல்லை. காதலி தனக்கு பிறந்த நாள் என்று ஸ்வீட் கொடுக்கும்போது அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சான்ஸே இல்லை. பெரிய கொடுமை. இரண்டு கதாநாயகிகளும், சண்முகப்பாண்டியனுக்கு அக்காபோல உள்ளார்கள். இவர்கள் இருவருடனும் சேர்ந்து ஒரு குத்தாட்டம் வேற. கொடுமையிலும் கொடுமை. ஜெகனுடன் சேர்ந்து மொக்கை காமெடி செய்யும் சண்முகப்பாண்டியன் தயவு செய்து இந்த படத்தோடு நிறுத்திக்கொண்டால் அவருடைய சொத்து காப்பாற்றப்படும், ரசிகர்களும் தப்பித்துக் கொள்வார்கள்
படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் படம் முழுவதும் வறட்சியோ வறட்சி. வறட்சி என்று குறிப்பிடுவது என் என்பது வாசகர்களுக்கு புரியும் என்று நினைக்கின்றோம்.
கடைசி பத்து நிமிடங்கள் மட்டும் கேப்டன் வருகிறார். சரி அவராவது வந்து ஏதாவது ஒரு உருப்படியான காட்சிகளை கொடுப்பார் என பார்தால், தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது போல அட்வைஸ்களை அள்ளி தெளிக்கிறார். கூடவே மறக்காமல் தனது கட்சிக்கு ஓட்டு போடும்படி மறைமுகமாக பிரச்சாரமும் செய்கிறார். விஜயகாந்தும் அவரது மகன் சண்முகப்பாண்டியனும் போடும் கிளைமாக்ஸ் சண்டை சரியான காமெடி. இருவரும் எதிரிகளை அடிக்கின்றார்களா? அல்லது கன்னத்தை தடவி கொடுக்கின்றார்களா? என்று பட்டி மன்றமே நடத்தலாம்.
இசை கார்த்திக் ராஜா. சிம்பு பாடிய அடியே ரதியே என்ற குத்துப்பாடல் தவிர மற்ற அனைத்து பாடல்களும் செம மொக்கை. பாடல்களின் வரிகள் என்ன என்பதே காதில் விழவில்லை. பின்னணி இசையை கேட்கும்போது இசைஞானியின் வாரிசா இப்படி? என்று வருத்தப்படுகிறது மனது. ஒளிப்பதிவு, எடிட்டிங் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யும் அளவுக்கு இந்த படத்தில் வொர்த்தான காட்சிகள் இல்லை என்பதால் அதையெல்லாம் அப்படியே விட்டுவிடலாம்.
இயக்குனர் சுரேந்திரனுக்கு உண்மையிலேயே சரக்கு இல்லையா? அல்லது விஜய்காந்த் பேமிலியின் தலையீடு காரணமாக அவர் சரியாக வேலை செய்யவில்லையா? என்பது தெரியவில்லை. சண்முகப்பாண்டியனுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்தவருக்கு ஆஸ்கார் அவார்டை விட பெரிய அவார்டு ஏதாவது இருந்தால் கொடுக்கலாம். ஒரு ஹீரோ இவ்வளவு கேவலமான காஸ்ட்யூம் எந்த படத்திலும் அணிந்து வந்ததாக ஞாபகம் இல்லை.
சல்லடை போட்டு சலித்து பார்த்தாலும் ஒரு காட்சியைக்கூட பாராட்ட இடமில்லை என்ற வருத்தம் மனதில் இருக்கின்றது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் புலம்பும் புலம்பலை வைத்தே இன்னொரு படம் தயாரிக்கலாம்.
மொத்தத்தில் சகாப்தம், சர்வமும் வேஸ்ட்.