தமிழர்கள் நேர்மையை மெதுவாகத்தான் வரவேற்பார்கள். சகாயம் ஐஏஎஸ்
மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் நேர்மை ஆட்சிப் பணி பயிற்சியகத்தில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்ற பலருக்கு பயிற்சி அளிப்பதற்காக நேர்மை பயிற்சியகத்தின் இலவச வகுப்புகள் தொடங்கப்பட்டது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதன் விளைவாகவே பலரின் ஒத்துழைப்போடு நேர்மை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
உலகில் நேர்மைதான் மிகவும் உயர்ந்ததென்று நினைக்கிறேன். அதற்காகத்தான் இந்த பயிற்சியகத்திற்கு நேர்மை என்று பெயர் வைத்தேன். ஆனால் நாட்டில் நேர்மை என்ற வார்த்தையைக் கேட்டாலே பலரும் பயப்படுகின்றனர். ஏதோவோர் அச்சமான சொல்லைப் போல் வியந்து பார்க்கின்றனர்.
திருநெல்வேலிக்கு ஒருவிழாவிற்கு சென்றிருந்த போது என்னை அழைக்க வரவேண்டியவர்கள் நீண்ட நேரமாக வரவில்லை. சிறிது தாமதத்திற்கு பிறகு வந்தவர்களிடம் பொதுமக்கள் நேர்மையான அதிகாரியை காக்க வைத்து விட்டதாக உரிமையோடு கடிந்தார்கள். அப்போது நான் சொன்னேன் அவர்களைத் திட்டாதீர்கள் நேர்மையை எப்போதும் தமிழர்கள் மெதுவாகத்தான் வரவேற்பார்கள் என்றேன்.
அது போல யாரும் நேர்மைக்கு வரவேற்பு இல்லை என்று ஒதுங்கிவிடாதீர்கள். கண்டிப்பாக நேர்மைக்கு மிகப்பெரும் மரியாதை கிடைக்கும். அதை நான் புதுச்சேரியில் கண்டேன். நான் பணியாற்றிடாத இடத்தில் கூட எனக்காக 5000 இளையர்கள் காத்துக்கிடந்தனர். மதுரை மக்களைவிட அதிகப்படியான உணர்ச்சிகளைக் கொண்டு என்னை வரவேற்றனர்.
என்னைப் போல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதை விட என்னை விட சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாக நினைத்து உழைத்திடுங்கள். முதலில் நமது வரலாறுகளைப் படியுங்கள். அதுதான் உங்களை உயர்த்தும். விவசாயத்தை காப்போம் கடந்த 15 வருடத்தில் மூன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற தகவல் வேதனைக்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் . நமது வாழ்வாதாரம் வயல்வெளிகளில் இருந்துதான் தொடங்குகிறது. வல்லரசு கனவுகளெல்லாம் வயல்களில் இருந்து தான் தொடங்க வேண்டும்
இவ்வாறு சகாயம் ஐஏஎஸ் பேசினார்