அருளாளர் ஸ்ரீசாயிநாதர் மகிமைகள்.

saibabaஸ்ரீகிருஷ்ண ராம சிவ மாருதி ரூபாயை நம:’ ஸ்ரீசாயி நாமாவளிகளில் ஒன்றான இதன் பின்னணியில் சாயி நிகழ்த்திய லீலைகள் மட்டும் இல்லாமல், ஒரு தத்துவ உண்மையும் பொதிந்து இருக்கிறது. இந்த நாம வரிசையை அப்படியே திருப்பிப் படித்தால், ‘ஸ்ரீமாருதி சிவ ராம கிருஷ்ண ரூபாயை நம:’ என்று வரும். இப்படி மாற்றிப் படிக்கலாமா என்ற கேள்வி நமக்கு ஏற்படுவது இயல்புதான். குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தில் உள்ள தத்துவ உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், அந்த வாக்கியத்தை நாம் எப்படியும் மாற்றிப் படிக்கலாம் என்பது சாஸ்திரங்கள் நமக்கு அளித்திருக்கும் கொடை.

அந்தச் கொடையைப் பயன்படுத்தி இந்த சாயி நாமத்தை நாம் திருப்பிப் படிக்கும்போது, பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஸ்ரீசாயி எங்கெங்கும் வியாபித்து இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

முதலில் வரும் மாருதி என்பது அனுமனைக் குறிப்பிடுவதாகும். குரங்கினத்தின் ஒப்பற்ற பிரதிநிதி அனுமன் என்பதால், பரிணாம வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் சாயிபாபா மாருதியாகப் போற்றப்படுகிறார்.

அடுத்து வருவது, ‘சிவ’ என்னும் நாமமாகும். சிவ என்பது சிவபெருமானைக் குறிப்பிடுவதுடன், ஆதிகால மனிதரையும் குறிப்பிடுவதாகும். ஆதிகால மனிதர்களுக்கு நெற்றியில் பாதாம் பருப்பின் அளவில் ஒரு புடைப்பு இருந்ததாகப் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை தம்முடைய கடல் கொண்ட தென்னாடு அல்லது லெமூரியா கண்டம் என்ற நூலில் ஆதாரத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களின் நெற்றியில் இருந்த புடைப்பானது, அவர்கள் பெற்றிருந்த அளவற்ற ஞானத்தின் அடையாளமாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அந்த அளவற்ற ஞானத்தின் உருவமாக ஸ்ரீசாயி போற்றப்பெறுகிறார்.

அடுத்து வருவது, ‘ராம’, ‘கிருஷ்ண’ எனும் நாமங்கள். இருவருமே அடுத்தடுத்த யுகங்களில் தோன்றிய அவதார புருஷர்கள். ராமபிரான் எப்படி தன் தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்தாரோ, அப்படி ஸ்ரீசாயிபாபாவும் தன்னை நம்பி வந்த பக்தர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் செய்தார். ஸ்ரீராமபிரான் பித்ரு வாக்ய பரிபாலனம் செய்தார் என்றால், சாயிநாதர் பக்த வாக்ய பரிபாலனம் செய்தார்.

கிருஷ்ணன், கீதோபதேசம் செய்த ஞான குருவாகவும் திகழ்ந்தார்; அவ்வப்போது தம்முடைய தெய்வாம்சத்தை வெளிப்படுத்திய தெய்வமாகவும் திகழ்ந்தார். ஸ்ரீசாயிநாதரும் பக்தர்களுக்கு ஞானத்தை உபதேசித்ததுடன், தம்முடைய தெய்வாம்சத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தி அருள் புரிந்திருக்கிறார்.

ஆக, பாபா ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதுடன் கிருஷ்ணராகவும், ராமராகவும், சிவனாகவும், மாருதியாகவும் தோன்றியவர்களின் கலியுக திருவடிவமே ஸ்ரீசாயி என்பது இந்த நாமாவளியில் இருந்து நமக்குப் புரிய வருகிறது. மேலும், இந்த நாம வரிசையில் உள்ள தெய்வங் களாகவும் பல்வேறு தருணங்களில் தம்முடைய பக்தர்களுக்கு அருட்காட்சியும் தந்திருக்கிறார்.

அப்படி ஒருமுறை, பாபாவை வணங்க முடியாது என்று மறுத்த ஒருவருக்கு ராமபிரா னாகக் காட்சி தந்து, அந்த அன்பர் தம்மை வணங்கும்படியாகச் செய்த சம்பவம் ஒன்றை இங்கே பார்ப்போம்.

பாபாவின் பக்தரான மம்லத்தார் என்பவர் ஒருமுறை ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசிக்க விரும்பினார். துணைக்குத் தன்னுடைய நண்பரான டாக்டர் ஒருவரையும் வரும்படி அழைத்தார். அந்த நண்பரோ ராமபிரானைத் தவிர, வேறு எந்த தெய்வத்தையும் வணங்காதவர். எனவே, அவர் தன்னை அழைத்த மம்லத்தாரிடம், ”உங்களுக்குத் துணையாக நான் ஷீர்டிக்கு வருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. மசூதியில் இருந்துகொண்டு, எப்பொழுதும் ‘அல்லா மாலிக்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் இஸ்லாமியரான பாபாவை நான் நமஸ்கரிக்க மாட்டேன். அப்படிச் செய்யும்படி என்னை யாரும் வற்புறுத்தவும்கூடாது!” என்றார்.

”நீங்கள் பாபாவை வணங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படிச் செய்யும்படி யாரும் உங்களை நிர்பந்திக்கவும் மாட்டார்கள். எனவே, நீங்கள் தயங்காமல் என்னுடன் வரலாம்” என்று உறுதி அளித்தார் மம்லத்தார். டாக்டர் நண்பரும் அதற்கு இசைவு தெரிவித்தார்.

இருவரும் ஷீர்டி சென்றனர். துவாரகாமாயிக்குள் நுழைந்ததுமே அந்த டாக்டர், பாபா இருந்த திசையில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார்.

மம்லத்தாருக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கே வரும்போது, ‘பாபாவை நமஸ்கரிக்கமாட்டேன்’ என்று மறுத்தவர், துவாரகாமாயிக்கு வந்ததுமே இப்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறாரே என்று திகைத்தவராக, அந்த டாக்டரைப் பார்த்தார்.

மம்லத்தாருடைய பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட அந்த டாக்டர், ”நான் அங்கே என்னுடைய தெய்வமான ஸ்ரீராமபிரானையே தரிசிக்கிறேன். என் ராமபிரான்தான் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார். அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த டாக்டருக்கு அதுவரை ராமராகத் தெரிந்த காட்சி மறைய, அங்கே பாபாவே தன் பக்தர் களுடன் உரையாடிக்கொண்டிருப்பதை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்.

மற்றவர்களுக்கு பாபாவாகக் காட்சி தந்தவர், உடன் வந்த டாக்டருக்கு அவருடைய இஷ்ட தெய்வமான ராமபிரானாக தரிசனம் தந்து அருள் புரிந்த பாபாவின் கருணையை நினைத்து  மம்லத்தார் பரவசம் அடைந்தார்.

தம்மை வணங்கமாட்டேன் என்று மறுத்த அந்த டாக்டர் தம்மை நமஸ்கரிக்க வேண்டும் என்பதற்காக பாபா அப்படி ராமராக தரிசனம் தர வில்லை. ‘துவாரகாமாயிக்குள் அடியெடுத்து வைப்பவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களைப் புனிதம் அடையச் செய்கிறேன். அவர்களின் சந்தேகங்களை அகற்றி, ஞானத் தெளிவினை அவரவர்கள் விரும்பும் வண்ணமே அவர்களுக்கு வழங்குகிறேன்’ என்ற தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றவே பாபா அந்த டாக்டருக்கு ராமராக தரிசனம் தந்தார்.

அந்த டாக்டர் பாபாவை நம்பவில்லை என்றாலும்கூட, துவாரகாமாயிக்குள் அடி யெடுத்து வைத்ததுமே, ‘பாபா ஓர் இஸ்லாமியரோ’ என்று சந்தேகப்பட்ட அவரின் சந்தேகம் நீங்கியதுடன், மதம் உள்ளிட்ட குறுகிய வட்டங்கள் அனைத்தையும் கடந்த அவதார புருஷரே பாபா என்ற ஞானத்தெளிவும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த டாக்டருக்கு மட்டும் இல்லாமல், வேறு சில தருணங்களிலும் பக்தர்களுக்கு ராமராக தரிசனம் தந்திருக்கிறார் பாபா.

பாபாவிடம் நாம் செல்லும்போது, ‘அது வேண்டும், இது வேண்டும்’ என்ற கோரிக்கைகளுடன் செல்லவேண்டிய அவசியமே இல்லை. பூரண நம்பிக்கையுடன் அவரை சரண் அடைந்து விட்டால், நமக்கு எப்பொழுது என்ன தேவையோ அதை அப்பொழுது அப்படியே நமக்கு வழங்கக்கூடிய அருளாளர் ஸ்ரீசாயிநாதர்.

பாபாவின் முன்னிலையில் நம்முடைய மனம் நிஷ்களங்கமாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் பாபாவின் கருணைக் கடாக்ஷம் பூரணமாக நமக்குக் கிடைக்கப் பெறலாம்.

Leave a Reply