‘சக்க போடு போடு ராஜா’ திரைவிமர்சனம்
ஒரு வருடத்திற்கு 40 படங்களில் காமெடியனாக நடித்து வந்த சந்தானம் கடந்த நான்கு வருடங்களில் வெறும் நான்கே படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த நான்கு படங்களும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இந்த நிலையில் சந்தானம் நடித்த மேலும் ஒரு ஹீரோ படம் தான் ‘சக்க போடு போடு ராஜா’
100 வருட தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நூறு படங்களில் வந்த கதை தான் இந்த படத்திலும் பிரபல ரவுடி சம்பத், அவருடைய தங்கையை காதலிக்கும் சந்தானம், இதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஹீரோ சந்தானம் எப்படி சமாளிக்கின்றார் என்பதை சிறிது காமெடியும் பெரிய அளவும் கடுப்புடனும் அளித்துள்ளனர்.
காமெடி ஹீரோவாக இருந்த சந்தானம், இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாகவும் மாற முயற்சித்துள்ளார். அதற்காக அவர் எடுத்துள்ள முயற்சி அதிகம் என்றாலும் ஆடியன்ஸ்களை கவரும் வகையில் கதையோ, திரைக்கதையோ இல்லாதது பெரும் ஏமாற்றம். நாயகி வைபவிக்கு பாடல் காட்சிகளில் கிளாமராக வரவும், ஒருசில காட்சிகளில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது.
வில்லன் சம்பத், வழக்கமாக தமிழ் சினிமாவில் வில்லன்கள் செய்யும் முட்டாள்தனத்தை செய்யும் கேரக்டர். இந்த படத்தின் ஒரே ஆறுதல் விவேக் தான். நகைச்சுவையில் பின்னி எடுக்கின்றார். ரோபோ சங்கரையும் விடிவி கணேஷையும் இந்த படத்தில் வேஸ்ட் செய்துள்ளனர்.
சிம்புவின் இசை கர்ண கொடூரமாக உள்ளது. ஒரு பாடல் கூட தேறவில்லை. பின்னணி இசையிலும் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த படம் ஒரு சலித்து போன ராஜா என்று தான் சொல்ல வேண்டும்
மதிப்பெண்: 2/5