உப்பும்…உடல் நலமும்

salt

உப்பு மிக சாதாரணமாக நாம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒன்று. கடலே இதன் இருப்பிடம். ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு கிடைக்கும். 6 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உப்புக்கு எத்தனை முக்கியத்துவம் அளித்து உபயோகித்துள்ளனர் என்பதை ஆய்வுகளும் குறிப்புகளும் கூறுகின்றன.

உப்புக்காக யுத்தங்களே நடந்துள்ளன என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் இது உண்மை. பண்ட மாற்று வியாபாரத்தில் உப்புக்காக தங்கத்தை கூட கொடுத்துள்ளனர் என்றால் உப்பின் முக்கியத்துவத்தை அறியலாம். கடல் நீரை பாத்தி கட்டி உப்பு தயாரிக்கும் முறை தொன்று தொட்டே இருந்து வருகின்றது.

‘சோடியம் குளோரைட்’ எனக் குறிப்பிடப்படும் உப்பு குளிர்சாதன பெட்டி இல்லாத காலங்களில் உணவை பதப்படுத்த பெரிதும் துணையாய் இருந்துள்ளது. இன்றும் டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் உப்பு சேர்க்கப்பட்டே உள்ளன. மனிதனுக்கு ஏன் உப்பு தேவை? மனிதனின் உடம்பில் உள்ள திரவ நிலையினை சமப்படுத்துவதில் உப்புக்கே பெரும் பங்கு உள்ளது.

சதைகள், நரம்புகள் இயக்கத்திற்கு உப்பே முக்கியமானது. நமது உடலே நம் உடம்பின் உப்பின் அளவை சீர் செய்து கொள்ளும். உடலில் உப்பு அதிகமாகி விட்டால் தாகம் எடுத்து தண்ணீர் குடிப்பர். அதிக உப்பு சிறு நீரகத்தின் வழியாக வெளியேறி விடும்.

நாள் ஒன்றுக்கு தேவையான உப்பின் அளவு வயது 11-க்கு மேல் உள்ளவர்கள் 6 கிராம் (2300 மி.கி. சோடியம்) வயது 7-10 வரை 5 கிராம் வயது 4-6 வரை 3 கிராம் வயது 1-3 வரை 2 கிராம் ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைக்கு உப்பு கொடுப்பதில்லை. ஏனெனில் அவர்களது சிறுநீரகம் 1 வயது வரை உப்பை வெளியேற்ற பக்குவமடைவதில்லை. ஆனால் இந்தியாவில் பெரும்பாலானோர் மிக அதிகமான அளவிலேயே உப்பை உட்கொள்கின்றனர்.

* ஊறுகாய்
* சிப்ஸ்
* அப்பளம்
* மோர் மிளகாய்
* தட்டை, முறுக்கு வகைகள்
* வத்தல், வடாம்
* சாதத்தில் உப்பு சேர்த்து சமைத்தல்
* பாப் கார்ன் என எதிலும் உப்பு அதிக அளவே உள்ளது.

இதன் காரணமே அதிக அளவில்

* உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு
* பக்கவாத பாதிப்பு
* இருதய பாதிப்பு என அதிக அளவில் இந்தியாவில் காணப்படுகின்றது.

100 கிராம் உப்பில் 1614 சதவீத சோடியம் உள்ளது. சோடியம் குறைந்து பொட்டாஷியம் கூடினால் இது போன்ற பாதிப்புகள் குறையும்.

வீட்டு மருத்துவமாக

* வாயில் காயம், சூடு புண்
* நாக்கு (அ) உள் கன்னத்தை கடித்துக் கொள்ளுதல்
* ஈறு வலி இவற்றிக்கு சுடு நீரில் உப்பு சேர்த்து கொப்பளிக்கச் செய்வர்.

அதிக உப்பு உடல் நிலையை எவ்வாறு பாதிக்கும்?

* உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்படுத்தும்.
* சிறிய குழந்தைகள், வயதானவர்கள், சிறு நீரக பாதிப்பு உடையவர்கள் இவர்களால் சரிவர உடலிலிருந்து அதிக உப்பை வெளியேற்ற முடியாது.
* அதிக உப்பு உண்பவர்கள் இளம் வயதிலேயே அதிக எடை உடையவராக ஆக்கி விடும்.
* அதிக உப்பு அதிக நோய்களை உருவாக்கும்.

டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை வாங்கும் போது

* குறைந்த உப்பு
* உப்பு சேராதது என்ற விவரங்களை படித்து வாங்குங்கள்.

கடல் உப்பு :

முன்பெல்லாம் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட கல் உப்பு இன்று மீண்டும் பிரபலமும், முக்கியத்துவமும் பெற்றுள்ளது. இயற்கையாகக் கிடைக்கும் இதை செயற்கை முறையில் பதப்படுத்துவதில்லை. அதனால் இதில் தாது உப்பு சத்து அதிகம் உள்ளது.

* உப்பு உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது. குறிப்பாக சளி, அலர்ஜி இவற்றிக்கு நல்ல தீர்வு கொடுக்கின்றது.

* 82 வகை சத்துக்களைக் கொண்டது.

* இதிலுள்ள ப்ளோனாட் பல், ஈறு, வாய்ப் புண் இவற்றை குணமாக்க உதவுகின்றது. உப்பு கொண்டு வாய் சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவுடன் இருக்க உதவுகின்றது.

* தாது உப்புகளின் அளவு சீர்பட உதவுகின்றது.

* சதை பிடிப்புகள் நீங்குகின்றது.

* மனித உடலில் உள்ள உப்பில் 20 சதவீதம் எலும்புகளிலேயே உள்ளது. கல் உப்பு எலும்புகளுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கின்றது. உங்கள் கண்ணை மறைக்கும் உப்பு (சுமாராக)

* பிரெட் (.5 கிராம்)

* பிஸ்கட் (2 பிஸ் கட்டில் .5 கிராம்)

* பாப்கான் (உப்பு சேர்த்தது) வெளியில் சாப்பிடும் இந்திய சாப்பாடு (2-3 கிராம்)

* பிட்ஸா (2.5 கிராம்) உணவில் உப்பு அதிகம் கூடினாலும் குறைந்தாலும்

* சதை பிடிப்பு

* மயக்கம்

* தாது உப்புக்கள் சரியின்மை

* நரம்பு பிரச்சினைகள்

* சில சமயம் இறப்பு கூட ஏற்படலாம்.

நீண்ட நாட்கள் உணவில் கூடுதல் உப்பு சேர்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களுக்கு :

* பக்கவாதம்
* இருதய பாதிப்பு
* ரத்தக் கொதிப்பு
* உடலில் நீர் கூடுதல்
* வயிற்றில் புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

உப்பின் பயன்கள் :

உப்பினால் 14 ஆயிரத்துக்கும் மேலான பயன்கள் உள்ளதாகவும், அதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. உப்பு பொது மக்களால் அதிகமாய் பயன்படுத்தும் ஒரு இடம் சமையலறை.

மற்ற பொதுவான உபயோகங்கள்:

* உப்பையும் டர்பன்டைன் எண்ணையையும் கலந்து மஞ்சள் கறை படிந்த இடங்களில் தேய்த்தால் கறை நீங்கும்.

* உப்பும் வினிகரும் கலந்து தேய்த்தால் காப்பர் பாத்திரங்கள் பளிச்சிடும்.

* சமையலறை வாஷ்பேஸினில் இரவு கல் உப்பு கொட்டி கழுவினால் பிசுபிசுப்பு நீங்கும்.

* உப்பு கலந்த சுடுநீரில் வாய் கொப்பளித்தால் அது கிருமி நாசினியாக செயல்படும்.

* உப்பு கலந்த நீரில் முட்டைகளை வேக வைத்தால் முட்டையை எளிதாய் உரிக்க முடியும்.

* ஒரு கப் நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து முட்டையை அதில் வைத்தால் நல்ல முட்டை மூழ்கும். கெட்டுப் போன முட்டை மிதக்கும்.

* ஆப்பிள், பேரிக்காய், உருளை இவற்றை வெட்டும்போது சிறிது உப்பு கலந்த நீரில் போட்டால் கருப்பு நிறமாகாமல் இருக்கும்.

* கீரையை உப்பு கலந்த நீரில் கழுவுவது நல்லது.

* காபி கப், அடுப்பு, ஓவன் இவைகளை உப்புநீரில் துடைத்தால் பளிச்சென ஆக்கும்.

* பிரிஜ் உள்ளே உப்பு நீர் கொண்டு சுத்தம் செய்து பிறகு சாதா நீரால் துடைத்தால் நன்றாக சுத்தமாகும்.

* சமையல் சோடாவுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்க பல் பளிச்சிடும்.

* உப்பு கலந்த வெது வெதுப்பான நீரில் பாதங்களை வைக்க பாதவலி நீங்கும்.

* உப்பு தூவிய இடத்தில் எறும்பு வராது.

* பூங்கொத்து வைக்கும் ஜாடி நீரில் உப்பு சேர்த்தால் பூக்கள் வாடாமல் இருக்கும்.

கருப்பு உப்பு :

கருப்பு உப்பு சில கலவைகளைக் கொண்டது. இளம் ரோஸ் நிறத்தில் இருக்கும். எங்கும் கிடைக்கும். பானிபூரி-சாட் வகைகள், ராய்தா (பச்சடி), சட்னி போன்றவற்றில் உப்புக்கு பதிலாக இதனை சேர்ப்பார்கள். பொரிக்கும் ஸ்நாக்ஸ் வகைகளிலும் சேர்ப்பார்கள். இன்று கிடைக்கும் ரெடிமேட் சாட் மசாலாக்களில் கூட இந்த உப்பு சேர்க்கப்படுகின்றது.

இதில் சோடியத்தின் அளவு குறைவாக இருப்பதால் செரிமானம், இரத்த அழுத்தம் சீர்படுதல் போன்றவற்றுக்காக இதை பயன்படுத்துகின்றனர். எந்த வகை உப்பாயினும் அளவோடு பயன்படுத்துவதே நல்லது. அயோடின் சேர்த்த உப்பு இன்று அதிகமாக பழக்கத்தில் உள்ளது.

Leave a Reply