திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை வழிபட்டனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா, கடந்த மாசி மாத கடைசி ஞாயிறு துவங்கி, நேற்றுடன் முடிந்தது. கடந்த ஒரு மாதமாக பச்சை பட்டினி விரதம் இருந்த வந்த அம்மனின் விரதம் முடிந்ததை அடுத்து, சித்திரை திருவிழா நேற்று காலை, 5.30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, 7.30 மணிக்கு கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திருவிழா துவங்கிய நிலையில், அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், ஆகிய வாகனங்களில் தினசரி எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், ஏப்ரல், 14ம் தேதியன்று நடக்கிறது. அன்று காலை, 10.31 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அடுத்த இரு நாட்கள், காமதேனு முத்துப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 17ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.