கோடைக் காலத்தில், உடல்சூடு காரணமாக ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நல்ல மருந்து, சந்தனம். கடைகளில் கிடைக்கும் சந்தனத் தூளில் கலப்படம் இருப்பதால், சந்தனக் கட்டையை வாங்கி, இழைத்துப் பயன்படுத்துவதே நல்லது. சந்தனத்தை இழைத்துக் காயவைத்து, அந்தப் பொடியைப் பயன்படுத்தலாம். நாட்டு மருந்துக் கடைகளிலும் கதர் அங்காடிகளிலும், சந்தனக் கட்டை கிடைக்கும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை என மூன்று நிறங்களில் சந்தனக் கட்டைகள் கிடைக்கின்றன. சிவப்பு சந்தனக் கட்டையைப் பயன்படுத்துவதே நல்லது.
சந்தன எண்ணெயைப் பயன்படுத்திவந்தால், உடல் சூடு குறையும், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால், ஒரு டீஸ்பூன் சந்தனத்தூளை, அரை லிட்டர் நீரில் கரைத்துக் காய்ச்சி, அந்த நீரைக் குடிக்கலாம். சந்தனத்தைப் பசும்பாலில் இழைத்து, சுண்டைக்காய் அளவு, காலை, மாலை வேளைகளில் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டுவர, வெள்ளைப்படுதல், சூடு குணமாகும்.
சந்தனக் கட்டையை, எலுமிச்சைப் பழச்சாறுவிட்டு இழைத்து, அதைப் படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு இருக்கும் இடத்தில் பூசிவர, உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும், கண் கட்டிகளின் மீது இரவில் பற்று போட்டு, காலையில் கழுவிவர, ஐந்தே நாட்களில் கண் கட்டி காணாமல் போகும்.
சந்தனக் கட்டையை எலுமிச்சம்பழச் சாற்றில் மைய அரைத்து, பசை போல செய்து, கட்டிகளின் மீது பற்றுப்போட வேண்டும். இரவில் படுக்கப்போகும் முன்னர், இவ்வாறு செய்து, காலையில் கழுவ வேண்டும். ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இரண்டு டீஸ்பூன் சந்தனத்தூளை, அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்துவர, ரத்த மூலம் குணமாகும்.
ஒன்றரை டம்ளர் நீரில், அரை டீஸ்பூன் சந்தனத்தூள் சேர்த்து, பாதியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி, மூன்று வேளை 50 மி.லி. அளவில் குடித்துவர, காய்ச்சல் குணமாகும். நிலவேம்புக் குடிநீரில் சந்தனத்தூள் சேர்க்கப்படுகிறது.
சந்தனத்தை உடலில் அரைத்துப் பூசிவர, வியர்க்குரு, வேனல் கட்டிகள் மற்றும் சரும நோய்கள் சரியாகும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து, வியர்வைக்கு வழி செய்யும். மனதுக்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு அழகையும் தரக்கூடியது சந்தனம்.