சண்டமாருதம். திரைவிமர்சனம்

sandamaruthamஏய்’ திரைப்படம் உள்பட ஏற்கனவே மூன்று முறை இணைந்த சரத்குமார்-ஏ.வெங்கடேஷ் கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைந்துள்ள திரைப்படம்தான் சண்டமாருதம். பெயரை மட்டும் வித்தியாசமாக வைத்துவிட்டால் போதுமா? கொஞ்சமாவது திரைக்கதையிலும் புதுமை செய்ய வேண்டும் அல்லவா?

கும்பகோணத்தில் தாதாவாக இருக்கும் சர்வேஸ்வரனை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் சூர்யா எப்படி ஜெயிக்கின்றார் என்பதுதான் கதை. இந்த படத்தில் கதை குறித்து சொல்வதற்கு எவ்வித புதுமையும் இல்லை.

இளையதலைமுறை இயக்குனர்கள் தற்போது நவீன டெக்னாலஜி மூலம் க்ரைம் மற்றும் ஆக்சன் திரைக்கதையை கொடுத்து வரும் நிலையில் நானும் அவர்களுக்கு போட்டியாக வித்தியாசமாக சிந்தித்துள்ளேன் என்று ஏ.வெங்கடேஷ் கூறிக்கொண்டாலும், திரைக்கதையில் எந்த வித்தியாசத்தையும் ரசிகர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் சோகம்.

வில்லன் சர்வேஸ்வரனாக சரத்குமார் கஷ்டப்பட்டு நடித்துள்ளது திரையில் காமெடியாக தெரிகிறது. அவருடைய பாடி லாங்க்வேஜும், குரலும் செயற்கைத்தனமாக உள்ளது. சரத்குமார் இனி கெளரவ வேடத்தில் மட்டும் தலைகாட்டுவது அவருக்கு கெளரவமாக இருக்கும்.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் சரத்குமார் நடிப்பு அதே பழைய ஸ்டைல்தான். எந்த புதிய முயற்சியும் இல்லை எனினும், ஓவியாவை தூக்கி வைத்துக்கொண்டு டூயட் பாடும் ஒரே ஒரு புதுமையை மட்டும் செய்துள்ளார்.

ஓவியா போலீஸ் இன்ஸ்பெக்டராம். அதை சப்டைட்டிலில் போடும்போது மட்டும்தான் நம்ப முடிகிறது. காமெடியன் இமான் அண்ணாச்சியுடன் அவர் அடிக்கும் கூத்து மகா மட்டரக கற்பனை.

மற்றொரு ஹீரோயின் மீரா நந்தன் பரவாயில்லை. ராதாரவி, காதல் தண்டபாணி ஆகியோர்கள் வழக்கம் போல் நடித்துள்ளனர். சிங்கம்புலி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி ஆகிய காமெடி கூட்டணிகள் இருந்தும்  நகைச்சுவை எடுபடவில்லை.

ஜேம்ஸ் வசந்தனின் பாடல்களில் ஒன்றுகூட தேறவில்லை. டைட்டிலுக்கு மட்டும் ஹாலிவுட் பாணியில் பின்னணி அமைத்த ஜேம்ஸ், ஆக்சன் காட்சிகளில் போட்டுள்ள பின்னணி சகிக்கவில்லை.

வழக்கம்போல் கேமராவும், எடிட்டிங்கும் நன்றாக இருந்தாலும் படம் ரசிகர்களுக்கு நிறைவு தரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்னை தேவிகலா தியேட்டரில் நேற்று ரிலீஸான முதல் நாளிலேயே சுமார் 50 பேர் மட்டுமே படம் பார்த்துள்ளனர். கொஞ்சம் பொறுத்தால் ஏதாவது ஒரு சாட்டிலைட் டிவியில் ஒளிபரப்பாகிவிடும் என்பதால் ரசிகர்கள் தேவையில்லாமல் காசு செலவழிக்க வேண்டாம் என்பதே நமது அறிவுரை.

சண்டமாருதம். படக்குழுவினர்களிடம் மாறுதல் தேவை

Leave a Reply