சங்குசக்கரம்: திரைவிமர்சனம் குழந்தைகளின் குதூகல சக்கரம்
பொதுவாக குழந்தைகளுக்கான படம் என்றாலே ஓரளவு சுமாராக இருந்தாலே எளிதில் வெற்றி பெற்றுவிடும். ஆனால் சங்குசக்கரம் திரைப்படம் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் என்பதால் இதன் வெற்றி ரிலீஸான இன்றே உறுதியாகிவிட்டது
ஒரு பேய் பங்களாவில் ஒன்பது குழந்தைகள் நுழைகின்றனர். அந்த பங்களாவில் தாய், மகள் என இரண்டு பேய்கள் உள்ளது. இதனிடையே இந்த பங்களாவிற்குள் ஒரு குழந்தையின் கார்டியன்கள் இருவரும், குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கூட்டம் ஒன்றும், ஒரு காதல் ஜோடியும் நுழைகின்றனர். இதனிடையே பங்களாவின் வெளியில் இருந்து பேயை விரட்டும் சாமியார் ஒருவரும் மந்திரம் சொல்கிறார். இவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தரப்பட்டுள்ள திரைக்கதை தான் ‘சங்குச்சக்கரம்’
முதலில் பேய் என்றால் இதுவரை பயமுறுத்தும் ஒரு அம்சம் என்றுதான் காலகாலமாக நமக்கு சொல்லி கொடுக்கப்பட்ட பாடம். ஆனால் முதல் ஒருசில காட்சிகள் தவிர இந்த படத்தில் உள்ள கேரக்டர்கள் சர்வ சாதாரணமாக பேய்களிடம் கேள்வி கேட்கின்றனர், பேய்களையே பயமுறுத்துகின்றனர், பேய்களுக்கே சவால் விடுகின்றனர், இவர்களை பார்த்துதான் பேய் பயப்படுகிறது என்கிற கான்செப்ட் இதுவரை யாரும் யோசிக்காத கான்செப்ட். மேலும் தமிழ் படங்களின் ஃபார்முலா, பேய்ப்படம் என்றாலே அதில் ஒரு மொக்கை பிளாஷ்பேக் இருக்கும். இதில் பிளாஷ்பேக் இல்லாதது பெரும் ஆறுதல். இயக்குனர் மாரீசன் முழுக்க வித்தியாசமான திரைக்கதையை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்
குழந்தைகளை கடத்தும் நபராக திலீப் சுப்பராயன், குழந்தைகளின் கார்டியனாக வரும் இரு வில்லன்கள், மற்றும் ஒன்பது குட்டீஸ்களின் நடிப்பு, பேயாக வரும் புன்னகைப்பூ கீதா ஆகிய அனைவரின் நடிப்பு அருமை. சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் கிராபிக்ஸ் கலக்கல், ரிச்சான கேமிரா, கச்சிதமான எடிட்ட்ங் குறிப்பாக ஷபீரின் பின்னணி இசை, ரவிகண்ணனின் ஒளிப்பதிவு, விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு ஆகிய கனகச்சிதம்
இந்த படத்தின் மிகப்பெரிய பலமே வசனங்கள்தான்: குறிப்பாக
‘நீ என்னை கொன்றுவிட்டால் நானும் பேயாக மாறி உன்னை கொடுமைப்படுத்துவேன்’
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?
சாகாவரம் தரும் நெல்லிக்கனியை சாப்பிட்ட அதியமான் ஏன் இறந்தார்?
சொர்க்கத்துக்கு போனால் சந்தோஷமாக இருக்கலாமே, அப்புறம் ஏன் மனிதர்கள் பூமியில் வாழ்ந்து கஷ்டப்படுகிறார்கள்
நிறைவேறாத ஆசையோட செத்தவங்க பேயாக மாறுவாங்கன்னா, இந்தியா சுதந்திரம் அடையனுங்கிற ஆசை நிறைவேறாம செத்த சுபாஷ் சந்திரபோஸ் பேயா மாறுனாரா? இனத்துக்காக செத்த எத்தனையோ தலைவர்கள் ஏன் பேயா வரல்ல?
தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு பேசறவங்க இறந்துபோய் பேயானா, அதே மொழியில பேசுவாங்களா? இல்ல பேய்களுக்குன்னு ஒரு காமன் மொழி இருக்கா?
‘பணம் நிரந்தரம் இல்லைன்னு சொன்னவன் எவனும் உயிரோட இல்லை, ஆனால் பணம் நிரந்தரமா இருக்குது;
வாய்ப்புக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பே கிடையாது;
தனியார் பள்ளியில படிக்கிற பசங்களா? அப்ப பெத்தவங்களோட மொத்த பணத்தை அப்படியே உருவியிருப்பாங்களே’
போன்ற வசனங்களில் உள்ள கருத்துக்கள் அருமை
மொத்தத்தில் சங்குசக்கரம், புத்தாண்டை குழந்தைகளுடன் சந்தோஷமாக கொண்டாட கிடைத்திருக்கும் ஒரு அருமையான வாய்ப்பு