நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்களை அனுமதிக்காத சனிபகவான் கோயில் நிர்வாகிகள். பெரும் பரபரப்பு
மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிங்கணாப்பூர் சனி பகவான் கோயிலில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள சிங்கணாப்பூரின் சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அந்த கோயிலுக்குள் வழிபாடு நடத்த பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு இட்டது. இந்த உத்தரவை அடுத்து இன்று சிங்கணாப்பூர் கோயிலுக்குள் திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை புனித நடைமேடை பகுதிக்குள் அனுமதிக்க கோயில் அலுவலர்கள் மறுத்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கோயிலுக்குள் நுழைந்த பெண்கள் அனைவரையும் போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசாய், மகாராஷ்டிர முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்வோம் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என்றும் இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை என்றும் கூறினர்.