பாகிஸ்தானின் மருமகளாக இருக்கும் சானியா மிர்சாவை தெலுங்கானா தூதராக நியமிக்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் கே.லட்சுமண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து சமீபத்தில் பிரிந்த தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதல்மந்திரியாக இருந்து வரும் சந்திரசேகரராவ், தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பரப்பும் நோக்கில், பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை மாநிலத்தின் தூதராக நியமித்துள்ளார். இதற்காக அவருக்கு தெலுங்கானா அரசு ரூ.1 கோடி வழங்கியுள்ளது.
தெலுங்கானாவில் இனி வருங்காலத்தில் நடைபெறும் மாநில வளர்ச்சி குறித்த நிகழ்ச்சிகளில், தூதர் என்ற முறையில் சானியா மிர்சா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கே.லட்சுமண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் பிறந்து ஐதராபாத்தில் செட்டில் ஆன சானியா மிர்சா, தெலுங்கானா போராட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து பாகிஸ்தான் மருமகளாக இருந்து வருகிறார். விரைவில் நடைபெறவுள்ள ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காகவே, முதல்வர் சந்திரசேகரராவ் இந்த மலிவான நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.