ஜாகீர்கான் பந்துவீச்சு சவாலாக இருந்தது. ஓய்வு பெற்ற சங்கரகரா பேட்டி
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்று இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கரகரா ஓய்வு பெற்றார். அவரை மரியாதையுடன் சக வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.
வழியனுப்பு விழாவில் அனைவருக்கும் நன்றி கூறி நெகிழ்ச்சியுடன் சங்கரகரா பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “இந்த தொடரில் அஸ்வின் எனக்கு சவாலாக இருந்தார். ஆனால் எனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஜாகீர்கான் (இந்தியா), சுவான் (இங்கிலாந்து) ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்வதில்தான் எனக்கு அதிக சவால் இருந்தது. இவர்களது பந்துவீச்சில் என்னால் சிறப்பாக செயல்பட இயலவில்லை.
வாசிம் அக்ரம் பந்துவீச்சு காலத்தில் நான் இளம் வீரராக இருந்தேன். அவரது பந்துவீச்சு ஸ்டைல் சிறப்பாக இருக்கும். பிராட்மேன் பேட்டிங்கை நான் வீடியோவில் பார்த்து இருக்கிறேன். அவர் ஒரு அபூர்வமான வீரர் ஆவார். கிரிக்கெட் சகாப்தத்தில் அவர்தான் சிறந்த வீரர். அவருடன் யாரையும் ஒப்பிட இயலாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்தவர் பிராட்மேன். அவர் 52 டெஸ்டில் 12 இரட்டை செஞ்சுரி அடித்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சங்ககரா 11 இரட்டை சதம் அடித்துள்ளார். லாரா (வெஸ்ட் இண்டீஸ்) 9 இரட்டை சதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது