சங்கர ராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முருகன் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
கொலை செய்யப்பட்ட சங்கர ராமனின் மனைவி பத்மா, அவரது மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் அரசு தரப்பு வழக்கிற்கு எதிராக சாட்சியம் அளித்தபடியாலும், கொலைக்கு மூல காரணமான அன்றைய தேதியிட்ட கடிதம் தொடர்பாக தலைமை புலன் விசாரணை அதிகாரி ஒப்புக்கொண்டு எந்த புலன் விசாரணையும் செய்யாததாலும், கொலைக்கான மூல காரணம் நிரூபிக்கப்படவில்லை.
குற்றம் மற்றும் கூட்டு சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் எதிரிகள், கிருஷ்ணசாமி என்ற அப்பு மற்றும் கதிரவன் ஆகியோர் சதித்திட்டம் தீட்டிய நேரத்தில் அந்த இடத்தில் இல்லை என்று தெளிவாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் புகார்தாரரும், நேரில் பார்த்த சாட்சியுமான
கணேஷ் (சங்கர ராமனுடன் பணிபுரிந்தவர்) அரசு தரப்பு வழக்கிற்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளபடியால் வழக்கின் அடிப்படையான புகார் நிரூபிக்கப்படவில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் மற்ற சாட்சிகளும், சம்பவத்தின்போது இறந்துபோன சங்கர ராமனுடன் பணிபுரிந்த சாட்சிகளுமான கணேஷ், துரைக்கண்ணு, குப்புசாமி ஆகியோர் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். அவர்கள் பிறழ் சாட்சிகள் ஆகிவிட்டனர்.
கொலை செய்யப்பட்ட சங்கர ராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்திரேயி ஆகியோர் கொலையாளிகளை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை. சம்பவ இடத்தில் சம்பவத்துக்கு முன்பும், பின்பும் கொலையாளிகளை பார்த்த சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்கள்.
சங்கர ராமன் கொலையில் 7-வது முதல் 12-வது வரையிலான எதிரிகள்தான் (ரஜினிகாந்த், அம்பிகாபதி, மாடு பாஸ்கர், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார், அனில்குமார்) கொலை செய்தார்கள் என்பதை நிரூபிப்பதற்காக விசாரிக்கப்பட்ட 20 சாட்சிகள் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். அவர்கள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர்.
எதிரிகளை அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காட்டிய எந்த சாட்சியும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை. மேலும் அவர்கள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார்கள்.
எதிரிகள் மீது குற்றத்தை நிரூபிக்க விசாரித்த மிக முக்கியமான 83 சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார்கள். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவில்லை.
எதிரிகள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நீதித்துறை நடுவர் முன்பு வாக்குமூலம் கொடுத்த மிக முக்கியமான சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார்கள். அவர்களது சாட்சியங்களை ஏற்றுக்கொள்ள ஏதுவாக இல்லை.
கொலையாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி செல்ல பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை சாட்சி விசாரணையின்போது யாரும் அடையாளம் காட்டவில்லை.
கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டார்கள். எனவே கொலை செய்ய குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பணம் கொடுத்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை.
போலி குற்றவாளிகளை சென்னை 5-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த வக்கீல்கள் 2 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டபடியால் போலி குற்றவாளிகளை எதிரிகள் சரணடையவைத்தார்கள் என்பதும் நிரூபிக்கப்படவில்லை.
அடையாள அணிவகுப்பு நடத்திய நீதித்துறை நடுவர்கள் முன்பு சாட்சியத்திற்கு ஏற்பளிக்கும் விதத்தில் எந்த சாட்சிகளும் சாட்சியம் அளிக்கவில்லை. இதனால் எதிரிகள்தான் இந்த குற்றத்தை செய்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை.
போலீஸ் சூப்பிரண்டு பிரேம்குமார், இவ்வழக்கின் புலன் விசாரணையில் தேவையற்ற தலையீடும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளும் செய்துள்ளார் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்து வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவரது தலையீடு புலன் விசாரணையில் இருந்தபடியால் புலன் விசாரணை அதிகாரியால் (சக்திவேலு) தன்னிச்சையாக, பாரபட்சமின்றி, சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை செய்ய முடியவில்லை.
தலைமை புலன் விசாரணை அதிகாரி, ஏனைய அதிகாரிகள் விசாரணை சாட்சிகளை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்த தவறிவிட்டார்கள்.
இந்த வழக்கில் – சில சாட்சிகள் (சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன்) வேண்டுமென்றே புகுத்தப்பட்டுள்ளார். சில சாட்சிகள் வாக்குமூலம் கொடுக்க அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட கதிரவன், ரஜினிகாந்த் ஆகியோரை சட்டத்திற்கு புறம்பாக போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
சம்பவத்தின்போது ஏட்டு ஆகவும், தற்போது சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வரும் கண்ணன் சாட்சிகளை வாக்குமூலம் கொடுக்க அச்சுறுத்தி இடைநீக்கம் செய்யப்பட்டவர். பின்னால் அவர் வாக்குமூலம் கொடுக்க பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாட்சிகள் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அச்சுறுத்தல் மூலம் பெறப்பட்டதாக உள்ளது.
இவ்வாறு நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.