சாரதா சிட்பண்ட் மோசடியில் தொடர்பா? ப.சிதம்பரம் மனைவியிடம் சிபிஐ விசாரணை.

nalini chidhambaramமேற்குவங்கத்தில் இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் கிளைகளுடன் செயல்பட்டு வரும் சாரதா சிட்பண்ட் நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது. எனவே இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய சி.பி.ஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. சிபிஐயின் அதிரடி நடவடிக்கையால் இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுதிப்தா சென் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சுதிப்தா சென் அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் கொல்கத்தா வரும்போதெல்லாம் அவருக்கு கட்டணம் வழங்கியதாகவும், அவர் தங்குவதற்கான ஐந்து நட்சத்திர ஓட்டல் செலவையும் தானே ஏற்றுக் கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய முழு நிதிநிலைமை குறித்து தெரிந்துகொள்ளாமல், மனோரஞ்சனாஸ் என்ற நிறுவனத்தில் 42 கோடி ரூபாய் முதலீடு செய்யுமாறு நளினி சிதம்பரம் வற்புறுத்தியதாகவும் கூறியிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணை குறித்த விவரங்களை சிபிஐ வெளியிடவில்லை.

Leave a Reply