சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நேற்று மேற்குவங்க போக்குவரத்து அமைச்சரை சிபிஐ போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தைரியம் இருந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கும், பாஜக தலைமைக்கும் சவால் விடுத்துள்ளார்.
பல ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை எளிய மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த சாரதா நிதி நிறுவன விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடியில் மம்தா பானர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்களை தொடர்ந்து சி.பி.ஐ. கைது செய்து வருவதில் பெரும் அதிருப்தி அடைந்துள்ள மம்தா பானர்ஜிக்கு, அக்கட்சியின் முக்கிய அமைச்சர் மதன் மித்ராவை நேற்று கைது செய்து சி.பி.ஐ. மீண்டும் அதிர்ச்சிக் கொடுத்துள்ளது.
இதனையடுத்து மம்தா பானர்ஜி, அதிகாரத்தை தவறாக பாஜக பயன்படுத்துகிறது என்றும், மேற்குவங்கத்தில் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொள்கிறது என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.