சரவணன் மீனாட்சி’ தொடரில் கணவன் மனைவியாக மிக அற்புதமாக நடித்த ‘மிர்ச்சி’ செந்தில் – ஸ்ரீஜா ஜொடி திடீரென திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்குபெற்றதாக கூறப்படுகிறது.
மிர்ச்சி ரேடியோவில் ஆர்.ஜேவாக பணிபுரிந்த செந்தில், ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொலைக்காட்சி தொடரில் சரவணனாக நடித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். இந்த தொடரில் சரவணனுக்கு ஜோடியாக மீனாட்சி கேரக்டரில் நடித்தவர் நடிகை ஸ்ரீஜா கேரளாவை சேர்ந்தவர். இருவரும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் காதலர்களாகவும், கணவன் மனைவியாகவும் மிக அந்நியோன்யமாக நடித்திருந்தனர். ரசிகர்கள் இவர்களின் ஜோடிப்பொருத்தம் மிகவும் அருமையாக இருப்பதாக கமெண்ட் கொடுத்து வந்ததால் நிஜத்திலும் இவர்கள் காதலிக்க ஆரம்பித்ததாகவும், பின்னர் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த ஜோடி நண்பர்கள் முன்னிலையில் கடந்த புதன்கிழமை திருப்பதியில் திருமணம் செய்துகொண்டனர். .
இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் கூறியதாவது, “சரவணன் மீனாட்சி சீரியலுக்காக நாங்கள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டோம். இதை அப்போது ஸ்ரீஜா குடும்பத்தினர் அவ்வளவாக விரும்பவில்லை. சீரியல் என்றால் அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே. விளம்பர புரமோஷனுக்காக, நிஜத்தில் நடப்பதுபோலவே திருமணம் நடத்த வேண்டுமா என்றார்கள். ஆனால், அப்போதெல்லாம்கூட எங்களுக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. நாளாவட்டத்தில், ‘நிஜமாகவே நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் என்ன?’ என்று நண்பர்களும் யூனிட்டிலும் கேட்க ஆரம்பித்தார்கள். பின்னர், எங்கள் வீட்டார் மட்டுமின்றி, ஸ்ரீஜாவின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். எங்களுக்குள் ஆரம்பத்தில் இருந்தே காதல் என்று எதுவும் இல்லை. ரசிகர்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது.
எளிமையாக திருப்பதியில் திருமணம் செய்துகொண்டோம். பின்னர், திருவல்லாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினோம். சம்பிரதாய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, முறைப்படி அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்றிருந்தோம். அதற்குள், ஃபேஸ்புக், ட்விட்டரில் திருமண போட்டோக்களை நண்பர்கள் வெளியிட்டுவிட்டனர். வேறுவழியின்றி, அதே நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்கள் திருமணத் தகவலை தெரிவிக்கிறோம். சீரியலில் ஜோடியாக நடித்த நாங்கள் சீரியஸாகவும் ஜோடியாக மாறி வாழ்க்கையை சட்டென்று தொடங்கிவிட்டோம்.” என்று கூறினார்