பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசியதால் மத்திய முன்னாள் அமைச்சரும், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என காங்கிரஸ் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஒரு முறை எச்சரிக்கை விடப்பட்டும் சசிதரூர் மோடியை பாராட்டி பேசி வந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடைக்கை எடுத்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் அவர் கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவார் என சசிதரூருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சசிதரூர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேருவார் என எதிரபார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சசிதரூர் மனைவி கடந்த ஜனவரி மாதம் டெல்லி ஓட்டல் ஒன்றில் மர்மமான முறை மரணமடைந்த விவகாரம் குறித்து தன்மீது எவ்வித நடவடிக்கையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாஜகவையும், மோடியையும் அவர் பாராட்டி வருவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. சசிதரூர் மனைவி சுனந்தாவின் மர்ம மரணத்திற்கு உண்மையான காரணம் வெளிவந்தால் பல சிக்கல்கள் உருவாகும் என்பதால் அந்த வழக்கை சுமூகமாக முடிக்கவே மோடியை அவர் பாராட்டி வருவதாக காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், “தூய்மை இந்தியா’ திட்டத்தில் தூதுவராகச் செயல்படுமாறு மோடி விடுத்த அழைப்பை சசி தரூர் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நீக்கம் குறித்து சசிதரூர் குறிப்பிடும்போது, ‘காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். அதேசமயம், புகார் தொடர்பாகப் பதிலளிப்பதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று பதிவு செய்துள்ளார்.