முதல்வர் பதவியை சசிகலா ஏற்கவுள்ளாரா? பொன்னையன் பதில்

முதல்வர் பதவியை சசிகலா ஏற்கவுள்ளாரா? பொன்னையன் பதில்

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு பெற்றுள்ள சசிகலா, நாளை அதிமுக தலைமையகத்தில் பொறுப்பை ஏற்று கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவியை அடுத்து முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்கவிருக்கின்றாரா என்ற தகவல் அதிமுகவினர்களிடையே பரவி வருகிறது.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுகவின் அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் கூறியபோது, “கழக பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து, அதற்கான தீர்மானத்தை சின்னம்மாவிடம் வழங்கி விட்டோம். அவரும், அதனை ஏற்றுக் கொண்டு விட்டார். கழக பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டாலே, பொதுச் செயலாளராக பதவியேற்றதாகத்தான் அர்த்தம். கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, நாளை வரவிருப்பது, வெறும் சம்பிரதாயம்தான். மேலும் முதல்வர் பதவியை சசிகலா ஏற்பது குறித்த கேள்விக்கு, ‘அதுபற்றி பொதுக்குழுவில் ஏதும் பேசப்படவில்லை. இப்போதைக்கு கட்சித் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். வேறு எதுவும் பொதுக்குழுவில் நாங்கள் விவாதிக்கவில்லை” என்று கூறினார்.

இதேபோல் அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறுகையில், “சின்னம்மா முதல்வராகப் பதவியேற்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. கட்சித் தலைமையிடம் இருந்து, அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலிடத்தில் இருந்து அதுபோன்று தகவல் வந்தால் மட்டுமே எதுவும் கூற முடியும்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply