தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக சசிகலா கணவர் நடராஜனுக்கும் பிரபல கராத்தே வீரர் ஹுசைனிக்கும் மோதல் நடந்து வருவது குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்துகொண்டு இருக்கின்றது. இந்நிலையில் குற்றாலத்தில் நடராஜன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சசிகலாவின் கணவர் நடராஜன் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக ஹூசைனி கொடுத்த புகாரின் அடிப்படையில் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் ஈழத் தமிழர்கள் அடைந்த துயரச்சம்பவங்களை விவரிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்களை அமைக்க நடராஜன் கராத்தே வீரர் ஹுசைனியிடம் முன்பணம் தந்திருந்தார்.
ஆனால் சிலை செய்து தருவதாக சொன்ன காலத்துக்குள் ஹுசைனி சிற்பங்களை செய்து தராமல் ஏமாற்றி வருவதாக முள்ளிவாய்க்கால் முற்றம் தரப்பினர் சென்னை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சிலை செய்த வகையில் முன்பணம் போக தனக்கு தர வேண்டிய மீதி பணத்தை கேட்கப் போன போது சசிகலா நடராஜன் தம்மை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக ஹூசைனியும் ஒரு புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில்தான் நடராஜனை சென்னை போலீசார் இன்று குற்றாலத்தில் கைது செய்துள்ளனர்.
இதனிடையே நடராசனிடம் ஹுசைனி கைப்பட எழுதிக் கொடுத்த கடிதத்தின் நகல் இன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் மிகத் தெளிவாக ரூபாய் 75 லட்சங்களை முள்ளிவாய்க்கால் முற்றதிற்காக பெற்றுக் கொண்டதை ஹுசைனி ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.