ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம். முதல்வர் தோழி சசிகலா கலந்து கொண்டார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கலந்துகொண்டார்.
தமிழக அரசின் சின்னமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரம் அமைந்துள்ள இந்த கோவிலில் இன்று அதிகாலை வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. விழாவில் தங்க விமானத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. வேதமந்திரங்கள் ஓத ராஜ கோபுரம் மற்றும் ஆண்டாள் தங்க விமானத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீதும் கும்பாபிஷேக தண்ணீர் தெளிக்கப்பட்டபோது, பக்தி பரவசம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 09.35 மணியளவில் கோயிலுக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கும்பாபிஷேகம் முடிவடையும் வரையில் இருந்து ஆண்டாளை வழிபட்டு பின்னர் புறப்பட்டு சென்றார். சசிகலா வருகை குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கும், கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமே முன்கூட்டியே தகவல் சொல்லப்பட்டதாக தெரிகிறது.
சசிகலா புறப்பட்டு சென்ற பின்னரே பெரும்பாலான அதிமுகவினருக்கு சசிகலா வருகை குறித்து தெரியவந்ததால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பார்வையிடுவதற்காக நகரின் முக்கிய இடங்களில் மின்னணு திரைகள் வைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 1400 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.